Thursday 9 March 2017

9TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து, சாய்னா
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது 2-ஆவது சுற்றில் 21-12, 21-4 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் டினார் தியாவைத் தோற்கடித்தார்.
மற்றொரு 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-8, 21-10 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார். சாய்னாவும், சிந்துவும் தங்களின் காலிறுதி ஆட்டங்களில் வெல்லும்பட்சத்தில் அரையிறுதியில் சந்திப்பார்கள்.
அதேநேரத்தில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 13-21, 5-21 என்ற நேர் செட்களில் சீனாவின் டியான் ஹுவெய்யிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

உலகம் :

அமெரிக்காவுக்கு பி.ஹெச்.டி. முடித்த வெளிநாட்டினரே வேண்டும்
"அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா அடிப்படையில் தாற்காலிகமாக பணிபுரிவதற்கு வெளிநாடுகளில் இருந்து பி.ஹெச்.டி பட்டதாரிகளும், கணினி விஞ்ஞானிகளும் வர வேண்டும்; ஆனால், நடுத்தரமான தகவல் மேலாண்மை தொழிலாளர்களே அதிகம் வருகின்றனர்'' என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டாம் காட்டன் கூறினார்.
கனடா, ஆஸ்திரேலியோ போன்ற நாடுகள் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றன. அதே நடைமுறையை அமெரிக்காவிலும் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார் என்றார் அவர்.
இதனிடையே, திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக, ஹெச் 1-பி விசா வழங்குவதை, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு கடந்த வாரம் அறிவித்தது.

இந்தியா:

மின்சார வாகனங்களுக்காக 1000 "சார்ஜிங்' நிலையங்கள் அமைக்க டாடா திட்டம்
தில்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 1000 மின்னேற்று (சார்ஜிங்) நிலையங்கள் அமைக்க டாடா தில்லி மின்சாரம் விநியோக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "வடக்கு, வடமேற்கு தில்லியில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்கள் அமைப்பது தொடர்பாக தில்லி மாநகராட்சி, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
வாகனங்களில் மின்னேற்றம் செய்ய 6 முதல் 8 மணி நேரம் ஆகும். அதுவரை வாகனங்களை நிறுத்தி வைக்க அதிகமாக இடம் தேவை.
தற்போது தில்லியில் உள்ள டாடா மின் விநியோக நிறுவனங்களில் 5 மின்னேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 1000மாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களில் விரைவாக மின்னேற்றம் செய்வதற்கான நிலையம் அமைக்க ரூ. 1 லட்சமும், சாதாரண மின்னேற்றம் செய்ய ரூ. 50,000-ம் தேவைப்படுகிறது.
மின்னேற்றம் செய்யப்படும் வாகனங்களைப் பயன்பாடு கடந்த ஓராண்டில் தில்லியில் அதிகரித்துள்ளது. இந்த வகையான வாகனங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் என்றார் அவர்.
விரைவில் புதிய ரூ.10 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விரைவில் புதிய ரூ.10 நோட்டுகளை புழக்கத்தில் விடவிருக்கிறோம்.
"மகாத்மா காந்தி வரிசை-2005' வடிவில் வெளியிடப்படும் அந்த ரூபாய் நோட்டுகளின் இரு பேனல்களிலும் ஆங்கில "எல்' எழுத்துகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்துடன் வெளிவரும் புதிய ரூ.10 நோட்டுகளில், "அச்சிடப்பட்ட ஆண்டு' என்னும் பகுதியில் 2017 என குறிப்பிடப்பட்டிருக்கும்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக, ரூபாய் நோட்டின் வரிசை எண்கள் அளவில் சிறிதிலிருந்து, பெரிதாக வளர்வதுபோல் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் முதல் 3 எழுத்துகள் மட்டும் ஒரே அளவு கொண்டதாக இருக்கும்.
புதிய ரூ.10 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஏற்கெனவே புழக்கத்திலிருக்கும் அனைத்து ரூ.10 நோட்டுகளும் வழக்கம்போல் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு
விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதுதொடர்பாக ஊரக நிதி நிறுவனங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் ஓர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள காரீஃப் பருவம் முதல் இந்தப் புதிய விதிமுறை அமலாகிறது.
எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், வங்கிகளுக்கு வருகை தரும் விவசாயிகளை ஆதார் திட்டத்தில் இணையுமாறு வங்கி அதிகாரிகளும் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், ஆதார் திட்டத்தில் இன்னமும் இணையாத விவசாயிகளுக்கு ஆதார் எண் கிடைப்பதற்கான வசதிகளை மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்  அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு  ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு எப்பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:
சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான முறையான தேர்தல் அறிவிப்பு மார்ச் 16-ஆம் தேதி அன்று வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மார்ச் 23-ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாகும். மறுநாளான மார்ச் 24 அன்று வேட்பு மனுக்களை பரிசீலனை நடைபெறும்.

வர்த்தகம் :

கரூர் வைஸ்யா வங்கி: 3 புதிய சேவைகள் அறிமுகம்
தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக 3 புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில், ஃபாஸ்டேக், யுனிஃபைடு பேமண்ட் இன்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.), பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (பி.பி.பி.எஸ்) ஆகிய மூன்று தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் யு.பி.ஐ. அடிப்படையில் "கே.வி.பி. இன்ஸ்டா பே' செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி விவரங்களை தெரிவிக்காமல் பல வங்கி கணக்குகளை பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment