Wednesday 15 March 2017

15TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

ஐசிசி சேர்மன் சஷாங்க் மனோகர் ராஜிநாமா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மன் சஷாங்க் மனோகர் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.


2 ஆண்டுகாலம் கொண்ட இந்தப் பதவியிலிருந்து 8 மாதங்களிலேயே விலகியுள்ள சஷாங்க் மனோகர், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
59 வயதான சஷாங்க் மனோகர், தனது ராஜிநாமா கடிதத்தை இ-மெயில் மூலம் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு அனுப்பியுள்ளார். அதில், ’நான் ஐசிசியின் முதல் சுதந்திரமான சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவன்.
என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்தேன். பல்வேறு விவகாரங்களில் முடிவெடுப்பதில் நியாயமாகவும், நடுநிலையாகவும் செயல்பட முயற்சித்தேன். அந்த நேரங்களில் அனைத்து வாரியங்களின் இயக்குநர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.
தனிப்பட்ட காரணங்களால் ஐசிசி சேர்மன் பதவியில் என்னால் தொடர இயலவில்லை. அதனால் உடனடியாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்.

உலகம் :

டிரம்ப் நிர்வாகத்தில் 2-ஆவது இந்திய-அமெரிக்கர்: மருத்துவப் பிரிவுத் தலைவராக சீமா வர்மா நியமனம்
அமெரிக்க அரசின் மருத்துவ சுகாதாரத் துறையில், முக்கியத்துவம் வாய்ந்தப் பிரிவின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில், முக்கியப் பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது இந்திய வம்சாளிப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிபர் மாளிகையில் துணை அதிபர் மைக் பென்ஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆலோசகரான சீமா வர்மாவை, முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி மையத்தின் தலைவராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார் என்றார் அவர்.
13 கோடி அமெரிக்கர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் அந்த மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், டிரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் இரண்டாவது இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை சீமா வர்மா பெற்றுள்ளார்.
ஏற்கெனவே, டிரம்ப் நிர்வாகத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தென்கொரியா: மே 9-இல் அதிபர் தேர்தல்
தென் கொரியாவில், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் பாக் கியூன்-ஹை-க்குப் பதிலாக, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டுச் சட்டத்தின்படி, அதிபர் பதவி விலகிய 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பிரெக்ஸிட் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் மசோதாவில் நாடாளுமன்ற மேலவை செய்த திருத்தங்களை நிராகரித்து கீழவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
முன்னதாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தங்கள் தேவை என மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கீழவையில் மீண்டும் அதன் மீது விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேலவையில் திருத்தங்களை எதிர்த்து 335 உறுப்பினர்களும், ஆதரித்து 287 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இனி அந்த மசோதா மீண்டும் மேலவையில் தாக்கல் செய்யப்படும். மசோதா மீது இனி எந்த விவாதமும் இல்லாமல், அதே வடிவில் மேலவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலை.
"நாட்டு மக்களும் உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ள நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் முட்டுக்கட்டை போடாமல் விரைவில் ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கையை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும்' என்று பிரெக்ஸிட் விவகார அமைச்சர் டேவிட் டேவிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறினாலும், பிரிட்டனில் வசித்து வரும் பிற 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட திருத்தங்களை மசோதாவில் கொண்டு வர வேண்டும் என்று மேலவை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்திய, ரஷிய கடற்படை தளபதிகள் சந்திப்பு
இந்திய கடற்படைத் தளபதி சுனில் லாம்பாவை, ரஷிய கடற்படைத் தளபதி விளாதிமிர் கோரோல்வ் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இருநாடுகளும் இணைந்து பாதுகாப்பை மேம்படுத்துவது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து இருவரும் முக்கியமாக விவாதித்தனர். 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷிய கடற்படைத் தளபதியுடன், கடற்படையைச் சேர்ந்த 4 உயரதிகாரிகளும் வந்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகளையும் ரஷிய குழுவினர் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.
இந்திய-ரஷிய கடற்படை இடையே நீண்ட நாள்களாக சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. இருநாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது. இப்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையுடன் ஒத்துழைப்பதை அதிகரிக்க ரஷியா ஆர்வம் காட்டிவருகிறது.

இந்தியா:

பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இன்று பதவியேற்கிறார்
பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை (மார்ச் 16) பதவியேற்கவுள்ளார். அவருடன் சில எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.
பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை காலை நடைபெறும் விழாவில், அமரீந்தர் சிங்குக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ஆளுநர் வி.பி. சிங் பட்னூர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு பஞ்சாப் முதல்வராக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அவர் பதவி வகித்துள்ளார். அதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழகம்:

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும். அதில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடா விட்டால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்' எனக்கூறி, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற சதீஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015, ஆகஸ்ட் 7ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், கடைநிலை பணிகளுக்கு, நேர்முக தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை; தேவை என்றால், எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இனி புதிய வாகனங்களின் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு  ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு:
தமிழகத்தில் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயமமாக்கபப்டுகிறது. அதேபோல் வாகனப் பதிவின் பொழுது பதிவு செய்பவரின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் :

நெறிமுறை சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா ஸ்டீல், விப்ரோ
சர்வதேச அளவில் நெறிமுறை சார்ந்து இயக்கும் நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த எதிஸ்பியர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டிருக்கிறது. இந்திய பட்டியலில் டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.
2017-ம் ஆண்டு 19 நாடுகளைச் சேர்ந்த 124 நிறுவனங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக் கிறது. 52 துறைகளில் இந்த நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் விப்ரோ மட்டுமல்லாமல் ஜெராக்ஸ் நிறுவனமும் இடம் பிடித்திருக்கிறது. உலோகத் துறையில் இரு நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த டாடா ஸ்டீல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஷ்னிட்ஸர் ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் அமெரிக் காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத் தம் உள்ள 124 நிறுவனங்களில் 98 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

Click here to download 15th march review in Tamil

No comments:

Post a Comment