Monday 13 March 2017

13TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்த முர்ரே, அதில் 4-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் வசேக் போஸ்பிஸிலிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
போஸ்பிஸில் தனது வாழ்நாளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். 2014-இல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதே இன்றளவிலும் போஸ்பிஸிலின் சாதனையாகும்.

இந்தியா:

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தில் 80 சதவீதம் அளவுக்கு வியாபித்திருந்த இந்த நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
புதிய நோட்டுகள் உடனடியாக புழக்கத்துக்கு வராததன் காரணமாக, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுப்பதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உண்டானது.
மணிப்பூர் மாநில முதல்வர் பதவிக்கு பைரென் சிங் தேர்வு: பா.ஜ.க அறிவிப்பு
மணிப்பூர் மாநில முதல்வர் பதவிக்கு பைரென் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக அறிவித்துள்ளது.
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் எந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், பாஜக பிற கட்சிகளின் ஆதரவுடன் 32 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியது.
இந்நிலையில், , பாஜக சார்பில் மணிப்பூர் முதல்வராக பதவியேற்க பைரென் சிங் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் 24 மணிநேரத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் :

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு: ரூ.5,000 இருப்பு அவசியம்
சென்னை உள்பட பெரு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் பராமரிக்க வேண்டும்.
சேவைக் கட்டணங்களைத் திருத்தி அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.3,000, சிறிய ஊர்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,000, கிராமங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 வீதம் கணக்கில் பராமரிப்பது அவசியம்.
சேவைக் கட்டணம் என்ற பெயரில்...மேலே குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து தொகையின் பற்றாக்குறைக்கு ஏற்ப தன்னிச்சையாக குறிப்பிட்ட தொகை சேவைக் கட்டணமாக கழிக்கப்படும்.
உதாரணமாக சென்னை உள்பட பெருநகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர், வரும் ஏப்ரல் மாத இறுதியில் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.2,500 மட்டும் வைத்திருந்தால், சேவைக் கட்டணமாக ரூ.50 மற்றும் சேவை வரியும் சேர்த்து அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து தன்னிச்சையாகப் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு தொகை குறைவுக்கு ஏற்ப சதவீத அடிப்படையில் ரூ.75, ரூ.100 (சேவை வரியுடன் சேர்த்து) சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நகைக்கடனுக்கு ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு
தங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேலான தொகை காசோலையாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த வரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது 20,000 ரூபாயாக ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.
முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் கூறும்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. சராசரியாக நாங்கள் வழங்கும் கடன் அளவு 35,000 முதல் 40,000 ரூபாய். இதனால் சிறு கடன் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றார்.
இதனால் தங்க நகைக்கடன் பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்தன. இதனால் இந்த பங்குகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment