Friday 24 March 2017

25TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் அங்குர் மிட்டல்; உலக சாதனையையும் சமன் செய்தார்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியில், இந்திய வீரர் அங்குர் மிட்டல் உலக சாதனையை சமன் செய்து தங்கப் பதக்கம் வென்றார்.


இதன் மூலம், மெக்ஸிகோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் பதக்கத்தை இந்தியா தங்கமாக பதிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட அங்குர் மிட்டல் மொத்தம் 138 புள்ளிகளுடன் 2-ஆவது இடம் பிடித்தார். ஆனால், சீன வீரர் யிங் கீயும் அதே புள்ளிகள் பெற்றதை அடுத்து, இருவருக்கும் இடையே டை-பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 6-5 என்ற கணக்கில் முன்னேறிய அங்குர் மிட்டல், 2-ஆவது இடத்தை உறுதி செய்து, 6 போட்டியாளர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
அதில், நிர்ணயிக்கப்பட்ட 80 இலக்குகளில் 5-ஐ மட்டும் தவறவிட்ட அங்குர் மிட்டல், 75 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அத்துடன், உலக சாதனையையும் சமன் செய்தார். அவருக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வில்லெட் 7 இலக்குகளை மட்டும் தவறவிட்டு, 73 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தார். சீனாவின் யிங் கீ 52 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கோவா பட்ஜெட் தாக்கல்: விவசாயம், கல்விக்கு முக்கியத்துவம்
கோவா மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக, சட்டப் பேரவைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர் மனோகர் பாரிக்கர்.
2017-18ஆம் நிதியாண்டுக்கான கோவா மாநில பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், கல்வி ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் பாஜக தலைமையிலான புதிய அரசால் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். சுமார் ரூ.16,000 கோடிக்கான மாநில அரசின் பட்ஜெட்டை, சட்டப் பேரவையில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து பேசியதாவது:
மாநில பொருளாதார வளர்ச்சியை, அடுத்த நிதியாண்டுக்குள் 11 சதவீதமாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.172 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். வர்த்தகரீதியிலான மாம்பழச் சாகுபடியை அதிகரிப்பதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியா:

கோவா பேரவை துணைத் தலைவராக பாஜக எம்எல்ஏ மைக்கேல் தேர்வு
கோவா சட்டப் பேரவை துணைத் தலைவராக பாஜக உறுப்பினர் மைக்கேல் லோபோ வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தபோதிலும், பிற கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார்.
இதனிடையே, கோவா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில், பேரவைத் தலைவராக பாஜக உறுப்பினர் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள்: மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:
சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், வரும் நிதியாண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதலாக 28 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. இதுதவிர, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவியையும் அளித்து வருகிறது. ஆனால், அந்த நிதியை பல மாநில அரசுகள் சரிவர பயன்படுத்தாமல், திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றன.
தமிழகம்:
தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு
தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்காக ஏற்கனவே 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தேர்வுகளை நடத்துவதற்கான 23 நகங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகழத்தில் மேலும் இந்தாண்டு நாமக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நேரில் சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் தில்லி சென்று வலியுறுத்தவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வர்த்தகம் :

பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையே இலக்கு! சாம்சங் பே செயலி அறிமுகம்
செல்லிடப்பேசி மூலம் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதே இலக்கு என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மொபைல் தொழில் பிரிவின் துணைத்தலைவர் அசீம் வார்சி தெரிவித்தார்.
புது தில்லியில் சாம்சங் நிறுவனம் சார்பில் -சாம்சங் பே- என்ற சாம்சங் செல்லிடப்பேசிகளுக்கான பணப் பரிவர்த்தனை செயலியை அறிமுகம் செய்து அவர் மேலும் பேசியதாவது:
சாம்சங் பே செயலி தளத்தை பயன்படுத்தி பொருள்கள் வாங்குவது, பல்வேறு கட்டணங்களை செலுத்துவது போன்றவற்றை செய்துகொள்ள முடியும். இந்த சாம்சங் பே தளத்தோடு பேடிஎம் மற்றும் மத்திய அரசின் யுபிஐ போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும்.
அதுமட்டுமல்லாமல் சாம்சங் நிறுவனம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டு, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி போன்றவற்றோடு ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு தனித்துவமான டிஜிட்டல் பேமெண்ட் சேவையை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment