Tuesday 28 March 2017

28TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

ஃபுகுயி அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்கலாம்: ஜப்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஜப்பானின் ஃபுகுயி அணு மின் நிலையத்தில் இரு அணு உலைகளின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.


ஜப்பானின் ஃபுகுயி மாவட்டத்தில் அமைந்துள்ளது தகஹாமா அணு மின் நிலையம். தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள அந்த மின் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக இரு அணு உலைகளை மூடுமாறு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அந்த அணு மின் நிலையத்தை உருவாக்கிப் பராமரித்து வந்த கன்சாய் மின் நிறுவனம், மாவட்ட நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து ஒசாகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அந்த முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், தகஹாமா அணு மின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன; எனவே அவை செயல்படத் தொடங்கலாம் என்று தீர்ப்பில் தெரிவித்தது.
அங்கு 3-ஆம் எண் உலையும், 4-ஆம் எண் உலையும் செயல்பட மாவட்ட நீதிமன்றம் விதித்த தடை செல்லுபடியாகாது என்றும் அந்தத் தடையை நீக்குவதாகவும் தீர்ப்பு அளித்தது.
ஜோர்டான் - சவூதி அரேபியா: பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கிடையில் 15 பொருளாதார ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. சவூதி மன்னர் சல்மான் மற்றம் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து ஜோர்டான் அரசின் செய்தி நிறுவனமான பெட்ரா தெரிவித்துள்ளதாவது
சவூதி அரேபியாவின் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஜோர்டான் அரசுடன் இணைந்து 15 பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அதில், இருநாடுகளும் இணைந்து ஜோர்டானில் ரூ.20,000 கோடி மதிப்பிலான முதலீட்டை மேற்கொள்ளும் திட்டங்களும் அடங்கும்.
ஜோர்டானின் கிழக்கு எல்லைப் பகுதியில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மறுசீரமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானின் மிக நெருங்கிய பொருளாதார நட்பு நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.
வேலையின்மை மற்றும் பொதுக் கடன் அதிகரிப்பு பிரச்னைகளால் ஜோர்டானின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷிய அதிபர் புதினுடன் ஈரான் அதிபர் சந்திப்பு
மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்துக் கை குலுக்கும் ஈரான் அதிபர் ரெளஹானி.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
ரெளஹானி ரஷிய பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த சந்திப்பின்போது, ரஷியா-ஈரான் இடையே பல பொருளாதார உடன்படிக்கைகள் கையெழுத்தாக உள்ளன. இருபது அணு உலைகளை அமைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. அதில் 9 அணு உலைகளை ரஷியா அமைக்கவுள்ளது.
ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை ரஷியா வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷியா, ஈரான் தலைவர்களின் சந்திப்பு, அந்நாட்டு அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்தியா:

மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
நீட் தேர்வு எழுதும் மையத்தை மாற்ற நேற்று கடைசி நாளான அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இம்மாதம் மார்ச் 31- வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது.
இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் 8,02,594 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 11,35, 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 24 முதல் மார்ச் 27( நாளை) வரை http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையத்தை தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில் தேர்வு மையத்தை மார்ச் 31-ம் தேதிவரை மாற்றிக்கொள்ளலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

விளையாட்டு:

தொடரைக் கைப்பற்றி வாகை சூடியது இந்தியா: கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியதற்கான கோப்பையுடன் இந்திய அணியினர் மற்றும் அலுவலர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 'பார்டர்-கவாஸ்கர் டிராபி'க்கான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வாகை சூடியது. இது, கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியின்றி இந்தியா பதிவு செய்துள்ள 7-ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். முன்னதாக, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்று வந்த இந்த கடைசி டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றனர்.
முன்னதாக, கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 88.3 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மட்டும் அதிகபட்சமாக 111 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

வர்த்தகம் :

இலகு ரக வர்த்தக வாகனங்களை உருவாக்க அசோக் லேலண்ட் ரூ.400 கோடி முதலீடு!
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், புதிய இலகு ரக வர்த்தக வாகனங்களை உருவாக்கும் பணிகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.400 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் (இலகு ரக வர்த்தக வாகனம்) நிதின் சேத் தெரிவித்ததாவது:
அசோக் லேலண்ட் நிறுவனம் உள்நாட்டு சந்தையை மட்டும் குறி வைக்காமல் வெளிநாட்டு சந்தைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
அந்த வகையில், இரண்டு புதிய வழிமுறைகளில் இலகு ரக வர்த்தக வாகனங்களைத் தயாரித்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வெவ்வேறு அளவிலான என்ஜின் சக்தி கொண்ட இடது மற்றும் வலது புற ஸ்டியரிங் அமைப்பைக் கொண்ட பல மாடல்களை உருவாக்கவுள்ளோம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலகு ரக வர்த்தக வாகனங்களின் மேம்பாட்டிற்காக ரூ.400 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம்.

No comments:

Post a Comment