Wednesday 1 March 2017

1ST MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!
எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.


உலக நாடுகள் தங்கள் பாதுகாப்பின் நலம் கருதி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை) மற்றும் ஆன்ட்டி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க வரும் ஏவுகணையை அழிக்கும் ஏவுகணை) ஆகியவைகளின் வளர்ச்சியில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டே போக, இந்தியாவும் ராணுவ வலிமையை பன்மடங்கு பெருக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நீள மற்றும் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வேண்டும் என்ற முயற்சியில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் பல்வேறு ஆயுதங்களை தயாரித்து, சோதனை நடத்தி வெற்றி கண்டு வருகிறது.
ஜேட்லியின் வங்கிக் கணக்கு விவரங்கள்: கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்பட பல்வேறு நிதி விவரங்களை சமர்ப்பிக்கக் கோரிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக கடந்த 2013-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளாக அருண் ஜேட்லி பதவி வகித்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை அருண் ஜேட்லி திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயன்றதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி அளிக்க வேண்டும் என்றும் கேஜரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் ராகவ் சதா, குமார் விஷ்வாஸ், ஆசுதோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகியோருக்கு எதிராக ஜேட்லி அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கின் விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழா தொடக்கம்
உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் நகரில் 29-ஆவது சர்வதேச யோகா விழாவை அந்த மாநில ஆளுநர் கே.கே.பால் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலம் யோகக் கலை தோன்றிய தேவபூமி ஆகும். ஆன்மிக மனத்துடன் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச யோகா விழாவில் உலகம் முழுவதிலும் இருந்தும் எண்ணிலடங்காத மக்கள் பங்கேற்கின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. யோகக் கலை இங்கிருந்து தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
யோகா விழா ஒவ்வோர் ஆண்டும் வசந்தகாலத்தை ஒட்டியே நடைபெறுகிறது. அப்போது, இமயமலையிலிருந்து பனிக்கட்டிகள் உருகி தெளிந்த கங்கை நீர் இங்கு பாய்ந்தோடும். அத்துடன், வசந்த காலத்தில் பூக்கும் மலர்களின் மிகச் சிறப்பான நறுமணமும் காற்றில் கலந்து வீசும் என்றார் கே.கே.பால்.
தமிழகம்:
’அம்மா கல்வியகம்' இலவச இணையதளம் தொடக்கம்
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயனடையும் வகையில், அம்மா கல்வியகம் (www.ammakalviyagam.in)  எனும் கட்டணமில்லா புதிய இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையதளத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
இந்த இணைதள சேவைத் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த திட்டமாகும். இதுபோன்ற திட்டங்களால்தான் ஜெயலலிதா மறையாத புகழோடு பொதுமக்கள் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார்.
ஏற்கெனவே தமிழக அரசின் மொத்த வருவாயில் 4-இல் ஒரு பங்கை மாணவர்களின் நலனுக்காக அவர் ஒதுக்கி, பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தினார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு :

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்றார் ஜிது ராய் அமன்பிரீத்துக்கு வெள்ளி
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் உலக சாதனையோடு தங்கமும், அமன்பிரீத் சிங் வெள்ளியும் வென்றனர்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஜிது ராய் 230.1 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றதோடு, உலக சாதனையும் படைத்தார்.
இறுதிச் சுற்றில் நீண்ட நேரம் முன்னிலையில் இருந்த அமன்பிரீத் சிங் கடைசிக் கட்டத்தில் அதை இழந்து 226.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஈரானின் வஹித் கோல்கண்டன் 208 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 10 மீ. பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற ஜிது ராய், இப்போது தங்கம் வென்றுள்ளார். இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹீனா சித்துவுடன் இணைந்து தங்கம் வென்றார். அதனால் அது சோதனை அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டி என்பதால் அதில் வென்ற தங்கம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

வர்த்தகம் :

கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது
பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், திலீப் சர்தேசாய் விருதுக்கு அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியருக்கு வழங்கப்படும் விருதான பாலி உம்ரிகர் விருதை மூன்றாவது முறையாக பெறவுள்ளார் கோலி. அவர், இதற்கு முன்னர் 2011-12, 2014-15 ஆகிய ஆண்டுகளில் மேற்கண்ட விருதைப் பெற்றுள்ளார்.
திலீப் சர்தேசாய் விருதை 2-ஆவது முறையாக பெறவுள்ள முதல் வீரர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்னர் 2011-இல் மேற்கண்ட விருதைப் பெற்றுள்ளார். இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அஸ்வின் இரு சதங்களை விளாசியதோடு, 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமல்
ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வரும் என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு மார்ச் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்டில் ஒப்புதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

No comments:

Post a Comment