Thursday 30 March 2017

30TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:
முரளி மனோகர் ஜோஷி, சரத் பவாருக்கு பத்ம விபூஷண்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.


பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டப்பட்டது. அதன்படி தலா 7 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இவர்களில் 39 பேருக்கு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
இதில், முரளி மனோகர் ஜோஷி, சரத் பவார், மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா (மரணத்துக்குப் பிந்தைய விருது), இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமச்சந்திர ராவ் ஆகியோர் பத்ம விபூஷண் விருது பெற்றனர்.
 
உ.பி. சட்டப் பேரவைத் தலைவராக ஹிருதய் நாராயண் தீட்சித் தேர்வு
உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தலைவராக, பாஜக மூத்த தலைவர் ஹிருதய் நாராயண் தீட்சித் (69), வியாழக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அண்மைக்காலம் வரை பாஜக சட்ட மேலவைத் தலைவராகப் பதவி வகித்து வந்துள்ளார்.
உத்தரப் பிரேதச சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு ஹிருதய் நாராயண் தீட்சித் ஒருவர் மட்டுமே புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். பேரவைத் தலைவர் பதவிக்கு ஹிருதய் நாராயண் தீட்சித்தை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் பாஜக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களும், சுயேச்சைகளும் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதையடுத்து, உத்தரப்பிரதேச சட்டப் பேரவையின் புதிய தலைவராக, ஹிருதய் நாராயண் தீட்சித் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா: 8 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது
தில்லியில் குடியரசு தலைவர் மாளிகையில்  பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், ரியோ ஒலிம்பிக் வீரர்கள் சாக்‌ஷி மாலிக், உடற்பயிற்சியாளர் திபா கர்மாகர் உள்ளிட்ட 8 விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ரியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், விகாஸ் கவுடா, சேகர் நாயக், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கடந்த குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட்ட 89 பத்ம விருதுகளில் 8 விளையாட்டு வீரர்கள் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளனர். பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் விளையாட்டு வீரர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

தமிழகம்:

'ஸ்மார்ட்' ரேஷன் அட்டை திட்டம்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
'ஸ்மார்ட்' ரேஷன் அட்டையை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை சென்னை அருகே கொரட்டூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை (ஏப். 1) தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பொருள்கள் வாங்காத அட்டைகள், காவலர் அட்டைகள், சர்க்கரைக்கு மட்டும் வழங்கப்பட்ட அட்டைகள், எல்லாப் பொருள்களும் வாங்கும் அட்டைகள், அந்தியோஜனா அன்னபூர்ணா திட்டம் என 5 வகைகளில் 1.91 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த அட்டைகளுக்கு 34,774 நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலாக புதிய அட்டைகள் வழங்காமல் பல ஆண்டுகளாக உள்தாள் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் போலி குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கி வந்தனர்.
அரசு மானியத்தில் வழங்கும் உணவுப் பொருள்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையும் வகையிலும், முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கத்திலும் பழைய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிதாக நவீன கையடக்க அளவில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கொரட்டூரில் தொடக்கம்: இத்திட்டத்தை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். இதில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
மற்ற மாவட்டங்களில்...: மாநில அளவில் சென்னை தவிர்த்து 285 வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமுதாயக் கூடம், திருமண மண்டபங்களில் முகாம் அமைத்து ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

விளையாட்டு:

 மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நடால், ஃபாக்னினி
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நடால்.
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை தோற்கடித்தார்.
1 மணி, 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு முறை ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடித்த நடால், அந்த செட்டை மிக எளிதாக 6-2 என்ற கணக்கில் தன்வசமாக்கினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் முதல் கேமிலேயே நடாலின் சர்வீஸை முறியடித்த ஜேக் சாக், 3-ஆவது கேமில் நடாலின் சர்வீஸை தன்வசமாக்குவதை நூலிழையில் தவறவிட்டார்.
மான்ட்ரியால் ஓபன்: அரையிறுதியில் செளரவ் கோஷல்
மான்ட்ரியால் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செளரவ் கோஷல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செளரவ் கோஷல் தனது காலிறுதியில் 11-8, 9-11, 9-11, 11-4, 15-3 என்ற செட் கணக்கில் மெக்ஸிகோவின் அர்டுரோ சலாஸரைத் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கோஷல் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் எகிப்தின் உமர் அதெல் மெகுத்தை எதிர்கொள்கிறார்.
எஸ்.வி. சுநீல், ஹர்மான்பிரீத்துக்கு ஏஎச்எஃப் விருது
ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் (ஏஎச்எப்) ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் எஸ்.வி.சுநீலும், சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு மற்றொரு இந்தியரான ஹர்மான்பிரீத் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா வாகை சூடுவதற்கு எஸ்.வி.சுநீல் முக்கியக் காரணமாக இருந்தார்.
ஹர்மான்பிரீத், ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வாகை சூடியதில் முக்கியப் பங்கு வகித்தார்.

வர்த்தகம் :

 
வோடஃபோன் - ஐடியா இணைப்பு: அரசு சிறப்பு சலுகை வழங்கவில்லை
வோடஃபோன்-ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களின் இணைப்புக்கு எந்தெவாரு சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: வோடஃபோன்-ஐடியா செல்லுலார் இணைப்பு நடவடிக்கைகளுக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் சார்பில் எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை. மேலும், எந்தவொரு நிறுவனமும் தொலைத் தொடர்பு சேவையில் கோலோச்சும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை.
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மேற்கொண்டு அதனை தொடர நிச்சயம் அனுமதிக்கப்படமாட்டாது. நிதி நிலை மற்றும் நுகர்வோர் நலன் சமநிலை ஆகிய கொள்கைகளை கடைப்பிடிப்பதை தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) உறுதி செய்யும். இணைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நிறுவனமும் தொலைத் தொடர்பு ஆணையத்தின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.


 

No comments:

Post a Comment