Tuesday 24 January 2017

25TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஆஸ்கர் விருதுக்கு இந்திய நடிகர் தேவ் படேல் பெயர் பரிந்துரை: 14 பிரிவுகளின் கீழ் "லா லா லேண்ட்' திரைப்படம் பரிந்துரை
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் திரைத்துறையினருக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.


இதில், 14 பிரிவுகளின் கீழ் ஹாலிவுட் படமான "லா லா லேண்ட்' என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், "லயன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த இந்திய நடிகரான தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
2017-ஆம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த விருதுக்கான பரிந்துரைகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.
இந்தப் பட்டியலில் "லா லா லேண்ட்' என்ற திரைப்படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் "ஆல் அபௌட் தி ஈவ்' (1959), "டைட்டானிக்' (1997) ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை "லா லா லேண்ட்' திரைப்படம் பெற்றுள்ளது.
"பிரெக்ஸிட்' குறித்து நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்: பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த முடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியூபர்கர் தீர்ப்பில் தெரிவித்ததாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவை அரசு தன்னிச்சையாக எடுக்க முடியாது. அது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு இறுதியானது அல்ல. நாடாளுமன்றத் தீர்மானம் மூலம்தான் வெளியேறும் முடிவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற இயலும்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து அதனை சட்டமாக இயற்ற வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையைத் தொடங்க இயலும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என 8 நீதிபதிகளும், பொது வாக்கெடுப்பு முடிவே போதுமானது - நாடாளுமன்ற ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று 3 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.

இந்தியா:

முதியோருக்கான புதிய ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான புதிய ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கக்கூடிய புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம், "வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா' என்ற பெயரில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டப்படி, முதலீட்டுத் தொகையில் ஆண்டுதோறும் 8 சதவீதத் தொகை 10 ஆண்டுகளுக்குத் திருப்பியளிக்கப்படும்.
இந்தத் தொகையை மாதா மாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ காப்பீட்டுதாரர் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுச் செயலரின் பதவிக்காலம் நீட்டிப்பு
மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெய்சங்கரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக்காலம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
இதையொட்டி, அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பதற்கான வரைவினை அமைச்சரவை நியமனக் குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதற்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

தமிழக காவல் துறையில் பணியாற்றும் 22 பேருக்கு குடியரசு தலைவரின் பதக்கம்: மத்திய உள்துறை அறிவிப்பு
நிகழாண்டுக்கான குடியரசுத் தலைவரின் சீர்மிகு, சிறப்புப் பணிக்கான (மெச்சத்தக்க) பதக்கம் தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 22 பேருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான பதக்கம் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
வீர, தீரச் செயல்; சீர்மிகு பணி, சிறப்பு அல்லது மெச்சத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர், பிரதமர் பதக்கம் ஆகியவை ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மத்திய, மாநில காவல் துறைகள், மத்திய காவல் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும்.
அந்த வகையில், அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் காவல்துறைகள், மத்திய காவல் படைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 777 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
மூன்று பிரிவுகள் கொண்ட இந்த பதக்கங்களில் உயரிய பதக்கமாகக் கருதப்படும் வீர, தீரச் செயலுக்கான பதக்கம் அஸ்ஸாம், தில்லி, உத்தரப் பிரதேசம் உள்பட எட்டு மாநிலங்களில் பணியாற்றுவோருக்கும், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக காவல் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, எஸ்எஸ்பி எனப்படும் எல்லை ஆயுதப் படை ஆகிய நான்கு மத்திய படைகளில் பணியாற்றுவோருக்கும் என மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு :

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரர்-வாவ்ரிங்கா மோதல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், சக நாட்டு வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரெவுடன் மோதினார் ஃபெடரர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 92 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஃபெடரர் 6-1, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், "ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வாவ்ரிங்கா அரையிறுதி வரை முன்னேறியது மகிழ்ச்சியே. ஆனால், இதுவே அவருக்குப் போதுமானது. இதற்கு மேல் அவர் போட்டியில் நீடிக்கத் தேவையில்லை' என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
தோனி, பி.வி.சிந்துவுக்கு பத்ம விருதுகள்
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
இந்த விருதுகளுக்கு விளையாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சிந்துவின் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

வர்த்தகம் :

பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு
பி.எஸ்.இ. (மும்பை பங்குச் சந்தை) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
மும்பை பங்கு சந்தை, வணிக நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.1,243 கோடியை பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட முடிவு செய்தது. அதன்படி, பங்கு ஒன்றை ரூ.805-ரூ.806 விலையில் விற்பனை செய்து இந்த தொகையைத் திரட்ட திட்டமிட்டது.
பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீடு சென்ற திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
மொத்தம் 1,07,99,039 பங்குகள் விற்பனை செய்யப்படவிருந்த நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து 1,08,89,568 பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தது.
மும்பை பங்குச் சந்தையின் பொதுப் பங்கு வெளியீடு புதன்கிழமை நிறைவடைய உள்ளது.
நடப்பு ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை மும்பை பங்குச் சந்தை பெற்றுள்ளது. செபி விதிமுறைப்படி இதன் பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது. தேசிய பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்படும்.

Click here to download 25th January Review in tamil

No comments:

Post a Comment