Sunday 22 January 2017

22ND & 23RD JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து: மத்திய அரசு திட்டம்
நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் இந்திய ரயில்வே துறைக்கும், யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேபாளம், வங்கேதசம், பூடான், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடன் இந்திய அரசு நல்லுறவைக் கொண்டுள்ளது. ரயில் போக்குவரத்து மூலமாக, அந்த நாடுகளுடன் தொடர்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து மூலம் தொடர்புகள் உருவாக்கப்பட்டால், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவை அதிகரிக்கும்.
ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் கையெழுத்து
அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதிபராகப் பதவியேற்றதும் டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவு இதுவாகும். அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம்.
புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் தேர்வு
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஆளும் சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் ஆட்சி முறை நடைமுறையிலுள்ள அந்நாட்டில் தற்போது சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பிரான்ஸýவா ஹொலாந்த் அதிபராக உள்ளார். மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட விருப்பமில்லை என்று ஹொலாந்த் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளரை முடிவு செய்வதற்கான முதல் சுற்றுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதமராக பதவி வகித்து வந்த மானுவல் வால்ஸ் வேட்பாளர் தேர்வில் குறிப்பிடும்படியானவர் என்றபோதிலும் அவர் வெற்றி பெற குறைவான வாய்ப்பே உள்ளதாகக் கருதப்படுகிறது.
சோசலிசக் கட்சி சார்பிலான அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக் கட்ட தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைபெறும்.

இந்தியா:

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
நாட்டிலேயே முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சையத் நசீம் ஜைதி மாநிலத் தலைநகர் பனாஜிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் ராணுவம், துணை ராணுவப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 822 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் மின்னணு முறையில் அனுப்பி வைப்பர்.
அவற்றை சம்பந்தப்பட்ட வீரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை நிரப்பிய பின் மின்னஞ்சல் வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்: ரஷிய உதவியுடன் இயக்கத் திட்டம்
ரஷிய நாட்டு உதவியுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இது தொடர்பாக முதல் கட்ட ஆய்வு அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்தராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது தயாரிக்கப்பட்டு வரும் ரயில் பெட்டிகளும், அமைக்கப்படும் தண்டவாளங்களும் அதிவேகமாக ரயிலை இயக்குவதற்கு ஏற்ப இல்லை. எனவே, ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் ரயில் பெட்டிகளும், தண்டவாளங்களும் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான திட்ட அறிக்கையும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த ரயிலை இயக்குவதற்கு முன்பு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகம்:

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது
தமிழக சட்டப் பேரவை இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மேலும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்ததரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு :

மலேசிய மாஸ்டர்ஸ்: சாய்னா சாம்பியன்!
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசியாவின் சாராவாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்கை தோற்கடித்தார். இதன்மூலம் தனது பாட்மிண்டன் வாழ்க்கையில் 23-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் சாய்னா.
26 வயதான சாய்னா, கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது முழங்கால் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றபோதும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
தொடர்ந்து போராடி வந்த அவர், இப்போது மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றதன் மூலம் நம்பிக்கைப் பெற்றுள்ளார்.
அனுராக் தாக்குருக்கு புதிய பதவி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர், ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கத் தலைவராக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மூத்த துணைத் தலைவராக வீரேந்தர் கன்வாரும், பொதுச் செயலராக ராஜேஷ் பண்டாரியும் தேர்வு செய்யப்பட்டனர். பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில், லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதற்காக பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், செயலராக இருந்த அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் அண்மையில் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில், மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக அனுராக் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகம் :

ஐபிஓ நடவடிக்கைகளை தொடங்கியது நியூ இந்தியா, ஜிஐசி
ஐந்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடுவதற்கு (ஐபிஓ) மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜிஐசி மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான நடவடிக் கையைத் தொடங்கியுள்ளன.
இந்த இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் ஐபிஓ-வுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கி யுள்ளன. பட்டியலிடுவது முடிவு செய்யப்பட்டாலும் பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே ஐபிஓ வெளியிட முடியும். நடப்பு நிதி ஆண்டில் பட்டியலிடுவதற்காக வாய்ப்பு மிகவும் குறைவு, அடுத்த நிதி ஆண்டில் பட்டியலிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டியல் செய்வதற்கு முன்பாக எவ்வளவு பங்குகளை விலக்கி கொள்வது என்பது குறித்து நிதி அமைச்சகத்தின் அனுமதி பெறப் படும். நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நியூ இந்தியா அஸ்யூ ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 514 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதற்கிடையே, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்போதுதான் நல்ல சந்தை மதிப்பில் பட்டியலிட முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Click here to download 22nd & 23rd January Review in Tamil

No comments:

Post a Comment