Monday 23 January 2017

24TH JANUARY REVIEW IN English FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது
சிரியாவில் நீடித்த அமைதி நிலவச் செய்வது குறித்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் திங்கள்கிழமை தொடங்கியது.

ரஷியா, ஈரான், துருக்கி முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. கஜகஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கைரத் அப்தரக்மனோவ் அறிமுக உரை நிகழ்த்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார்.
சிரியா அரசு சார்பாக, அந்நாட்டின் ஐ.நா. தூதர் பஷார் அல்-ஜாஃபரி கலந்து கொண்டார். சிரியாவுக்கான ஐ.நா. தூதர் ஸ்டெஃபான் டிமிஸ்டூரா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
இஸ்லாமிய ராணுவம் என்கிற கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முகமது அல்லூஷ் கிளர்ச்சியாளர்கள் சார்பிலான குழுவுக்குத் தலைமை தாங்கினார். கிளர்ச்சியாளர்கள் குழுவில் அவர்களுக்கு ஆலோசனை வழங்க சில சட்ட நிபுணர்களும் அரசியல் பார்வையாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் அண்மையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பதால் அந்நாட்டின் சார்பில் எவரும் பேச்சுவார்த்தையில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. எனினும் கஜகஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஜார்ஜ் க்ரோல் பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தில் இருந்தார்.
மோரீஷஸ் பிரதமர் திடீர் ராஜிநாமா
மோரீஷஸ் பிரதமர் அனிருத் ஜகந்நாத் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை அதிபர் அமீனா குரீப் ஃபகீமிடம் அவர் அளித்தார். அதையடுத்து அவரது மகன் பிரவீந்த் ஆட்சிப் பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்டது.
தந்தையின் அமைச்சரவையில் பிரவீந்த் ஜகந்நாத் நிதி அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். மேலும் ஆளும் கட்சியான தீவிர சோஷலிச கட்சியின் தலைவராகவும் அவர் உள்ளார். அக்கட்சியினர் அவரது தலைமையை முழு மனதோடு ஏற்பதாக அறிவித்தனர்.
ஆனால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியா:

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டை: ஆளுநர் உரையில் அறிவிப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் அவர் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் விவரம்:-
கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மதுல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தோடு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வேறுபாடின்றி அரிசி வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
ஸ்மார்ட் ரேஷன் அட்டை: பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்த அதன் செயல்பாடுகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் அளிக்கப்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாநில அரசு வலியுறுத்திய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

தமிழகம்:

தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்ட முன் வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இயக்குநர் கௌதமன், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜேசேகரன், ஆதி, அம்பலத்தரசு உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு நேரில் வந்து பார்வையாளர்களாக பார்வையிட்டனர்.

விளையாட்டு :

காலிறுதியில் நடால், ரயோனிச், செரீனா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கனடாவின் மிலோஸ் ரயோனிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தையசுற்றில் நடால் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 6-3, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் கேல் மான்பில்ஸை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 9-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நடால், அது குறித்துப் பேசுகையில், "சில ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு காலிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
2015 பிரெஞ்சு ஓபனுக்குப் பிறகு முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நடால், அடுத்ததாக கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை சந்திக்கிறார்.

வர்த்தகம் :

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 6.2 கோடி டாலர் முதலீடு செய்தது இன்போசிஸ்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக இன்போசிஸ் நிறுவனம் 50 கோடி டாலர் தொகையை ஒதுக்கி இருந்தது. இதில் 6.2 கோடி டாலர் தொகையை முதல்கட்டமாக ஆட்டோமெஷின், ட்ரோன் உள்ளிட்ட பிரிவுகளில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்த நிதியத்தை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியது. அப்போது 10 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிதியை 50 கோடி டாலராக இன்போசிஸ் உயர்த்தியது.
“ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதுமையாக இருக்கின்றன. 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம். இது வரை 6.218 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறோம். நாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களை எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்ற திட்டமிட்டிருக்கிறோம்” என இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்தார்.
“வரும் 2020-ம் ஆண்டில் 2,000 கோடி டாலர் என்பதை வருமான இலக்காக நிர்ணயம் செய்திருக்கிறோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய வகை சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். வரும் காலங்களில் மொத்த வருமானத்தில் இதுபோன்ற புதிய பிரிவுகளின் வருமானம் 10 சதவீதம் அளவுக்கு இருக்கும்.

No comments:

Post a Comment