Tuesday 17 January 2017

17TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் விலகல்: பிரிட்டன் அறிவிப்பு
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என்று அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.


ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்காக, அதன் 28 உறுப்பு நாடுகளுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து தெரசா மே லண்டனில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலும், ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கலாம் என்ற யோசனையை ஏற்க முடியாது.
தனி நாடுகள் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படும்.
யூனியலிருந்து விலகுவதற்கான இறுதி ஒப்பந்தம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றார் அவர்.
எனினும், நாடாளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாமலேயே அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியா:

சிபிஐ-க்கு விரைவில் புதிய இயக்குநர்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் இழுபறிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய இயக்குநர் யார்? என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு விரைவில் முடிவெடுக்கும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார்.
பொதுவாக, சிபிஐ அமைப்பின் இயக்குநரை பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை இடைக்காலமாக சிபிஐ இயக்குநர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படுவது வழக்கம்.
அனில் சின்ஹா ஓய்வு பெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, அதாவது சிபிஐ சிறப்பு இயக்குநர் பொறுப்பு வகித்து வந்த ஆர்.கே.தத்தா, மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு இடைக்கால இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தத்தாவுக்கு வர வேண்டிய இயக்குநர் பொறுப்பை வேண்டுமென்றே மத்திய அரசு தடை செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும், சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் தலைமையிலான குழு கூடி முடிவெடுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி வாதிட்டதாவது:
சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு, திங்கள்கிழமை கூடி விவாதித்தது. புதிய இயக்குநர் தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்டு வரும் நபர்கள் குறித்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், புதிய இயக்குநர் பெயர் வெளியிடப்படும் என்றார் அவர்.
எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
அதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த முதல்வருமான எம்ஜிஆரின் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், அஞ்சல் தலையை அஞ்சல் துறை தலைமை இயக்குநர் டி.மூர்த்தி வெளியிட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
விழாவையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு விழாவில் பங்கேற்றோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். இதையடுத்து, தபால் தலை வெளியிடப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கடம்பூர் சி.ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம்:

வாக்காளர்களுக்கு தேவையான தகவலுடன் புதிய மொபைல் செயலி: தேர்தல் ஆணையம் அறிமுகம்
வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
அந்த செயலியில் வாக்காளர் பட்டியலில் எப்படி பெயர் சேர்ப்பது, குறிப்பிட்ட தொகுதியில் எங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பது முதல் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த செயலி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
வாக்காளர்கள் அந்தச் செயலியை தரவிறக்கம் செய்து வேட்பாளர்கள் வேட்புமனுவின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களையும் நேரடியாக பார்க்க முடியும். கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள், அப்போது வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த செயலி வாக்காளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குசாவடி மையங்கள், வாக்காளர் அடையாள சீட்டுகள் ஆகியவற்றையும் வாக்காளர்கள் தாங்களாகவே நகல் எடுக்க முடியும் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு ECI ஆப் என பெயரிடப்பட்டுள்ளது.

விளையாட்டு :

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா, நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தின் இளம் வீராங்கனையான பெலின்டா பென்சிக்கை எதிர்கொண்டார்.
ஆஸ்திரேலிய ஓபன்: முர்ரே, ஃபெடரர், வாவ்ரிங்கா போராடி வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்டன் வாவ்ரிங்கா ஆகிய முன்னணி வீரர்கள் தங்களது முதல் சுற்று ஆட்டத்தில் போராடி வெற்றி பெற்றனர்.
ஆண்டின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, உக்ரைனின் இலியா மார்சென்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் முர்ரே, 7-5, 7-6 (7/5), 6-2 என்ற செட் கணக்கில் மார்சென்கோவை போராடி வீழ்த்தினார்.
3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா, தரவரிசையில் 35-ஆவது இடத்திலுள்ள ஸ்லோவாக்கியாவின் மார்ட்டின் கிளிசானை எதிர்கொண்டார்.

வர்த்தகம் :

டாடா மோட்டார்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை நியமிக்க நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.
மேலும், நிர்வாகக் குழுவில் கூடுதல் இயக்குநராகவும் அவரை நியமிக்க முடிவாகியது. இந்த நியமனங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to download 17th January Review in Tamil

No comments:

Post a Comment