Tuesday 10 January 2017

11th January Review in Tamil For TNPSC, SSC, IPPB & Insurance

உலகம்:

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் ஆஷ்லே டெல்லிஸ்?
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக, மும்பையில் பிறந்தவரும், வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரியுமான ஆஷ்லே டெல்லிஸ் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுதொடர்பாக, "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக ஆஷ்லே டெல்லிஸை தேர்வு செய்வதற்கு, அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டொனால்டு டிரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையில் மூத்த ஆலோசகராக பணியாற்றியிருக்கும் ஆஷ்லே (55), இந்தியா, அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்கப்பூர்வ அணுசக்தி உடன்பாடு எட்டப்பட்டதில் முக்கிய பங்காற்றியவராவார்.
தற்போது இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக இருக்கும் ரிச்சர்டு வர்மாவின் பதவிக் காலம் வரும் 20-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர், அதிபர் பராக் ஒபாமாவால் கடந்த 2015-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்.
இந்நிலையில், ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனை, ரிச்சர்டு வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்கத் தூதராக எனது பதவிக் காலம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைவதை, அமிதாப் பச்சனிடம் தெரிவித்தேன். "ஈடுஇணையில்லா இந்தியாவில்' பணியாற்றியதை கௌரவமாகக் கருதுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
வெள்ளை மாளிகையின் முக்கிய ஆலோசகராக மருமகனை நியமித்த ட்ரம்ப்
அமெரிக்காவிவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ர்மப் தனது மருமகனை வெள்ளை மாளிகையின் முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளார்.
இதன்மூலம் ரியல் எஸ்டேட் நிர்வாகியான ஜார்ட் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் தொடர்பாக அம்சங்களை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
டர்ம்பின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சித்த ஜனநாயக கட்சியினர், ட்ரம்ப் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ட்ரம்ப் கூறும்போது, "எனது மருமகன் மிகப்பெரிய சொத்து. அவருக்கு நிர்வாகத்தில் முக்கிய பதவி வழங்கியதில் பெருமை அடைகிறேன்" என்று கூறியுள்ளார்
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டத்தை அடுத்து குஷ்னர், ரியல் எஸ்டேட் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் குஷ்னர் வெள்ளை மாளிகையின் ஆலோசகராக சம்பளம் இல்லாமல் பணி செய்யவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா:

குஜராத் முதலீட்டாளர் மாநாடு: வெளிநாட்டுத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
குஜராத்தில் நடைபெற்றுவரும் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
"வைப்ரண்ட் குஜராத்' என்ற பெயரிலான இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்கு முன்பு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வணிக இதழான "ஃபார்ச்சூன்' வெளியிட்ட சிறந்த 500 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில் பலரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே, செர்பியா பிரதமர் அலெக்சாண்டர் உசிக், ஜப்பான் பொருளாதார அமைச்சர் சிகோ ஹிரோசிகே உள்ளிட்டோரையும் மோடி சந்தித்துப் பேசினார்.
வறட்சி பாதித்த மாநிலம் தமிழகம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், வறட்சியால் பாதித்த நெல்-மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
தமிழகத்தில் வறட்சியால் பாதித்த மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.
ஆய்வறிக்கை அளிப்பு: அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வினை மேற்கொண்ட குழு, தங்களது அறிக்கையை அரசுக்கு கடந்த திங்கள்கிழமை (ஜன.9) அளித்தன. இந்தக் குழுக்கள் அளித்த அறிக்கைகளின்படி, விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு-வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன், மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்படும்.
இவ்வாறு மாற்றியமைக்கத் தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,028 கோடி பயிர்க்கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்கப்படும்.
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடும் நபர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து பொங்கல் கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகைக்கு பதிலாக, பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகம்:

சென்னைத் துறைமுக நிதி ஆலோசகராக பி.எஸ்.வேமன்னா பொறுப்பேற்பு
சென்னைத் துறை முகத்தின் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலராக சி.எஸ்.வேமன்னா (48) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
எண்ணூர் காமராஜ் துறைமுகத்தில் தலைமை நிதி மேலாளராக கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் வேமன்னா. இதற்கு முன்பு ஓஎன்ஜிசி, பிஎஸ்என்எல், ஐசிஎஃப் உள்ளிட்ட நிறுவனங்களில் நிதி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், சென்னைத் துறைமுக நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலராக பி.எஸ்.வேமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பொறுப்பில் இருந்த ஜி.செந்தில்வேல் கொச்சி துறைமுக துணைத் தலைவராகப் பதவி உயர்வில் சென்றதால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு :

வாழ்நாள் தலைவர் பதவி: கல்மாடி, செளதாலா நியமனத்தை திரும்பப் பெற்றது இந்திய ஒலிம்பிக் சங்கம்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஒஏ) வாழ்நாள் தலைவர்களாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, அபய் சிங் செளதாலா ஆகியோரை நியமித்ததை அந்தச் சங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதையடுத்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்ட ஐஒஏவின் அங்கீகாரம், மீண்டும் அந்தச் சங்கத்துக்கு வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
முன்னதாக, கல்மாடி, செளதாலா ஆகியோரது நியமனம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அந்த நோட்டீஸுக்கு அளித்துள்ள பதிலில் ஐஒஏ தலைவர் என்.ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது:
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் சென்னையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஐஒஏவுக்கு 2 வாழ்நாள் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தை உறுப்பினர் ஒருவர் எழுப்பினார்.
எனினும், விதிகளின் படி அதுதொடர்பாக எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டத்தின்போது அந்தப் பதவிக்கான பரிந்துரைகளை உறுப்பினர்கள் முன்வைக்கலாம்.
'ஃபிஃபா சிறந்த வீரர்' விருது வென்றார் ரொனால்டோ
சர்வதேச கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் (ஃபிஃபா) "2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்' விருதை போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
"2016-ஆம் ஆண்டானது, எனது கால்பந்து வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டு' என்று விருதை வென்ற ரொனால்டோ குறிப்பிட்டார்.
இந்த விருதுக்காக, ரொனால்டோவுக்கு ஆதரவாக 34.5 சதவீதம் பேரும், ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு ஆதரவாக 26.4 பேரும் வாக்களித்துள்ளனர். தேசிய கால்பந்து அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களைக் கொண்டு இந்த விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதனிடையே, லெய்செஸ்டர் சிட்டி கிளப் கால்பந்து அணியின் பயிற்சியாளரான கிளாடியோ ரானிரிக்கு "சிறந்த பயிற்சியாளர்' விருது வழங்கப்பட்டது. அமெரிக்க கால்பந்து வீராங்கனை கார்லி லாய்ட் "சிறந்த கால்பந்து வீராங்கனை' விருது வென்றார்.

வர்த்தகம் :

2016 ஏப்ரல் - நவம்பரில் வரி வருவாய் அதிகரிப்பு: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தகவல்
2016-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் இடையிலான மாதங்களில் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அருண்ஜேட்லி குறிப்பிட்டார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை இருந்தபோதிலும் 2015 ம் ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகிற போது நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றார். முன்கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டு பேசிய ஜேட்லி மேலும் கூறியதாவது: .
வரி வருவாய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொருளாதார விவகாரத்துறை செயலர் கூறியதையும் ஜேட்லி சுட்டிக் காட்டினார். 2015 ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களைவிட 2016 ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களில் ஒட்டுமொத்த நேரடி வரி வருவாய் 12.01 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மறைமுக வரி வசூலும் 2015-ம் ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2016 ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களில் மத்திய கலால் வரி வசூல் 43 சதவீதமும், சேவை வரி வசூல் 23.9 சதவீதமும், சுங்க வரி 4.1 சதவீதமும் 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் டிசம்பர் மாத நிலவரப்படி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை களுக்கு பிறகு மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் மறைமுக வரி வருவாய் 14.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

Click here to download 11th January Review in Tamil

No comments:

Post a Comment