Friday 13 January 2017

13TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகள்: சீனாவின் முப்படைகள் தீவிரப் பயிற்சி
சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட ராக்கெட் படை கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகளுடன் கடந்த ஆண்டு தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உலகின் மிகப் பெரிய ராணுவப் படையை கொண்ட சீனா, நவீன காலத்துக்கு ஏற்ப, தனது ஆயுத பலத்தையும் புதுப்பித்து வருகிறது. மேலும் முப்படைகளின் பயிற்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சீனா ராணுவப் பயிற்சி நடத்தியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயிற்சியில் முப்படைகள் மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட ராக்கெட் படையும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சீனா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில் ராணுவம் சார்பில் 15 பிரிகேடியர்கள் கலந்து கொண்டனர்.
விமானப்படை சார்பில் தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணை பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் மேற்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் நடத்தப்பட்டது. தவிர ராக்கெட் படையினர் சார்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகளுடன் 20-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்ப்பீன் ரக 2-ஆவது நீர்மூழ்கிக் கப்பல்: நாட்டுக்கு அர்பணிப்பு
ஸ்கார்ப்பீன் ரக 2-ஆவது நீர்முழ்கிக் கப்பலான "கந்தேரி' நாட்டுக்கு வியாழக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், நிகழாண்டு இறுதியில் கடற்படையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் "கந்தேரி' நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ப்ரே, அவரது மனைவி பீனா பாம்ப்ரே, கடற்படைத் தளபதி சுனில் லான்பா ஆகியோர் கலந்து கொண்டனர். நீர்மூழ்கிக் கப்பலை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியை சுபாஷ் பாம்ப்ரே தொடங்கி வைத்தார். இதையடுத்து, பீனா பாம்ப்ரேயும், சுனில் லான்பாவும் அந்தக் கப்பலைத் தொடங்கி வைத்தனர்.
இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல், இந்தியக் கடற்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா:

தில்லியில் ஜன. 17 முதல் 3 நாள் மாநாடு: சர்வதேசத் தலைவர்கள் உரை
உலக நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள மூன்று நாள் கருத்தரங்கில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
உலக நாடுகளிடையே தொடர்பு, ஆசிய-பசிபிக் அரசியல், பயங்கரவாதிகளையும், நாடு கடந்த குற்றவாளிகளையும் எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் வரும் 17-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்தக் கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாறிவரும் உலகச் சூழல் குறித்து அவர் பேசுவார் என்று தெரிகிறது. மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் உரைநிகழ்த்த உள்ளனர்.
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹுதீன் ரப்பானி, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரகாஷ் சரண் மஹத், வங்கதேசப் பிரதமரின் ஆலோசகர் கோஹர் ரிஸ்வி உள்ளிட்ட தலைவர்களும், அமெரிக்காவின் பசிஃபிக் பிராந்திய ராணுவ கமாண்டர் ஹாரி பி.ஹாரிஸ், பிரிட்டனின் ராணுவ உயரதிகாரி கிறிஸ்டோஃபர் டெவரெல் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஸா: அதிநவீன "பினாகா-2' ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து அதிநவீன மேம்படுத்தப்பட்ட "பினாகா' மார்க்-2 ஏவுகணை வெற்றிகரமாக வியாழக்கிழமை சோதிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பினாகா மார்க்-1 ஏவுகணையைக் காட்டிலும் மார்க்-2 ஏவுகணை கூடுதல் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள போர்க்கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏஆர்டிஈ), தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) ஆகியவை இணைந்து "பினாகா' மார்க்-2 ஏவுகணையை உருவாக்கின.
இந்த ஏவுகணையில் தாக்குதல் நடத்துவதற்கான குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தல், இலக்கை தேவைக்கேற்ப திடீரென மாற்றியமைத்தல், திசையறிதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
"பினாகா' மார்க்-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை (டிஆர்டிஓ) பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பாராட்டினார்.

விளையாட்டு :

சிட்னி டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சானியா ஜோடி
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா-பர்போரா ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வானியா கிங்-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் சானியா-பர்போரா ஜோடி, 4 முறை எதிர் ஜோடியின் சர்வீஸை முறியடித்தது.
சானியா-பர்போரா ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் ஹங்கேரியின் டிமியா பபாஸ்-ரஷியாவின் அனாஸ்டாஸியா ஜோடியைச் சந்திக்கிறது.
கடந்த ஆகஸ்டில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸிடம் இருந்து பிரிந்த பிறகு 8-ஆவது தொடரில் விளையாடி வரும் சானியா, 6-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பர்போராவுடன் இணைந்து சின்சினாட்டி, டோக்கியோ போட்டிகளிலும், மோனிகா நிகுலெஸ்குவுடன் இணைந்து நியூ ஹெவன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சானியா.
ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: யூகி பாம்ப்ரிக்கு 2-ஆவது வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.
அவர், தனது 3-ஆவது சுற்று ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுவிடுவார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் வரும் திங்கள்கிழமை மெல்போர்னில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியாவின் யூகி பாம்பரி தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை தோற்கடித்தார். 2009-இல் ஜூனியர் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான யூகி பாம்ப்ரி, தனது 3-ஆவது தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் எர்னெஸ்டோ எஸ்கோபீடோவை சந்திக்கிறார்.
கால்பந்து தரவரிசை: 129-ஆவது இடத்தில் இந்தியா
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 129-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் அதிகபட்ச தரவரிசை இதுதான்.
கடந்த ஆண்டு 11 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, அதில் 9-இல் வெற்றி கண்டது. இதன்மூலம் சர்வதேச தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் கூறுகையில், "இந்திய வீரர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் இந்திய அணி இப்போது சிறப்பான தரவரிசையை எட்டியுள்ளது' என்றார்.
இந்திய அணி இதற்கு முன்னர் 2005-ஆம் ஆண்டில் 127-ஆவது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு இப்போதுதான் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது.

வர்த்தகம் :

டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்
டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், தற்போது, டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.
தேர்வுக் குழு ஒருமனதாக பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரது சீரிய தலைமையின் கீழ் டாடா குழும நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஸ்நாப்டீல் உத்தி பிரிவு தலைவராக ஜேசன் கோத்தாரி நியமனம்
ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதி காரி ஜேசன் கோத்தாரி ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உத்தி பிரிவு தலைவ ராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் கள் குணால் பஹல் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார் என ஸ்நாப்டீல் நிறு வனம் அறிக்கை மூலம் தெரிவித் திருக்கிறது.
வரும் 16-ம் தேதி புதிய பொறுப்பில் கோத்தாரி இணைய இருக்கிறார். ஜேசன் ஏற்கெனவே இரு நிறுவனங்களின் சிஇஓவாக இருந்தவர். ஸ்நாப்டீல் குழுமத் துக்கு அவரை வரவேற்கிறோம் என ஸ்நாப்டீல் நிறுவனர் குனால் பஹல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment