Wednesday 18 January 2017

18TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

மத்திய இத்தாலியில் ஒரு மணி நேரத்துக்குள் 3 முறை நிலநடுக்கம்
இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று (புதன்கிழமை) ஒரு மணி நேரத்துக்குள் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் இத்தாலியின் தலைநகரம் ரோமிலிருந்து வெகு தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், "இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று காலை 10.25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் முன்றாவது நிலநடுக்கம் 50 மற்றும் 10 நிமிட இடைவெளியில் ஏற்பட்டன. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.70ஆகவும், 5.3ஆகவும் பதிவாகியது " என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை.
கடந்த ஆண்டு இத்தாலியின் மத்தியப் பகுதி மலை பிரதேசமான அமடிரைஸ் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகினர்.

இந்தியா:

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும்: ஐ.நா. அறிக்கை
சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.6 சதவீதம் முதல் 7.7 சதவீதம் வரை இருக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் ஏற்பட்டும் விளைவுகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இது தொடர்பாக ஐ.நா.வின் பொருளாதார விவகாரத் துறை அதிகாரி மேத்யூ ஹாம்லி கூறியதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கி, டிசம்பரில் நிறைவு செய்தோம். எனவே, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் தற்போது தனிநபர்கள் மத்தியில் பொருள்களுக்கான தேவை அதிகம் உள்ளது. எனவே, 2017-ஆம் ஆண்டில் அந்நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கும்.
எனவே, பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதம் வரை இருக்கும். ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது, பொதுமக்களின் செலவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், அது மிகவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும்.
சுற்றுலாப் பயணிகளைக் கவர கேரளத்தில் புதிய திட்டங்கள் அறிமுகம்
சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் கேரளத்தில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக கேரள சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் கே.பி.நந்தகுமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இருந்து கேரளத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே படகு இல்லம், சுற்றுச்சூழலுடன் காணப்படும் மலைப் பிரதேச சுற்றுலா, ஆயுர்வேதம் ஆகியவற்றில் கேரளம் சிறந்து விளங்குகிறது.
இந்த ஆண்டு முதல் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் கிரீன் கார்பெட் திட்டம் மூலம் கடந்த ஆண்டு முதல் சுற்றுலாத் தலங்களில் தூய்மையை வலியுறுத்தும் நோக்கத்தில் அறிவியல் பூர்வமாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் மலையேற்றம், மிதிவண்டி மெல்லோட்டம், பாரா கிளைடிங் போன்ற சாகசம் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதை சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டோருக்கு எடுத்துரைக்கவே சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சந்தைப்படுத்துதல் முயற்சியின் மூலம் சர்வதேச அளவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றாக கேரளம் இடம்பெறும்.

தமிழகம்:

தில்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதன்கிழமை இரவு தில்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் நிலையை கோரிக்கை மனுவாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுத்து உரிய நிவாரணத்தை மத்திய அரசு தர வேண்டும் என கேட்டுக் கொள்ள தில்லி செல்கிறேன்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழர்களின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு தலையிட்டு உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படும். வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சந்திப்பு நடைபெறவுள்ளது.
மாணவர்களுடன் சந்திப்பு: ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களுடன் சற்று நேரம் சந்தித்து உரையாடினேன். நான் சொன்ன விளக்கத்தைக் கேட்டு அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

விளையாட்டு :

ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் ஃபெடரர், கெர்பர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-ஆவது சுற்றில் 17 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், தரவரிசையில் 17-ஆம் இடம் வகிப்பவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் தகுதிச் சுற்று வீரரான நாஹ் ரூபினை எதிர்கொண்டார்.
2 மணி நேரம் 4 நிமிடம் ரசிகர்களை குதூகலப்படுத்திய இந்த ஆட்டத்தில் 7-5, 6-3, 7-6 (7/3) என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது அடுத்த ஆட்டத்தில், நீண்ட நாள் எதிரியான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதுகிறார்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: சாய்னா, அஜய் ஜெயராம் வெற்றி
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், தாய்லாந்தின் சாசினி கோர்பாப்பை எதிர்கொண்டார். இதில், 21-9, 21-8 என்ற செட் கணக்கில் சாய்னா, வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் ஆடவர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள இந்திய வீரர் அஜய் ஜெயராம், தனது 2-ஆவது ஆட்டத்தில் 21-10, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜூன் ஹா லியாங்கை வீழ்த்தினார். அஜய் ஜெயராம், தனது அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயின் ஷு சுவானை எதிர்கொள்கிறார்.

வர்த்தகம் :

எல்.ஐ.சி. ஹவுசிங் லாபம் 19% உயர்வு
எல்.ஐ.சி. ஹவுசிங் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 19 சதவீதம் அதிகரித்து ரூ. 499.26 கோடியாக இருந்தது என்று அறிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு செயல்பாடுகளைக் குறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 3,548.72 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது ரூ. 3,156.70 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய நிகர லாபம் ரூ. 418.90 கோடியாகும். அதைக் காட்டிலும் தற்போது 19.2 சதவீதம் அதிகரித்து ரூ. 499.26 கோடியை நிகர லாபமாக நிறுவனம் பெற்றுள்ளது என்று எல்.ஐ.சி. ஹவுசிங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment