Monday 6 February 2017

7TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு :

இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ராஜிநாமா
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதேநேரத்தில் ஒரு வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற குக், இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார்.
32 வயதான குக், தனது ராஜிநாமா கடிதத்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் காலின் கிரேவ்ஸிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.
இது தொடர்பாக குக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்ததும், கடந்த 5 ஆண்டுகளாக அணியை தலைமையேற்று வழிநடத்தியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் ஆகும்.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவது என்பது நம்பமுடியாத மிகக் கடினமான முடிவுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது சரியான முடிவு. இது இங்கிலாந்து அணியின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவைச் சந்தித்தது. இதில் முதல் போட்டியில் இந்திய வீரரான வேலவன் செந்தில்குமார், மலேசிய வீரர் ஓங் சாய் ஹுன்னை வீழ்த்தினார்.
அடுத்த போட்டியில் இந்தியாவின் அபய் சிங், டாரன் ராகுலை வென்றார். இதைத்தொடர்ந்து 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி, தங்கப் பதக்கத்தை வென்றது. இப்போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னதாக 2011-ம் ஆண்டில் இந்திய அணி இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

உலகம்:

நேட்டோ உச்சி மாநாடு: டிரம்ப்புக்கு அழைப்பு
நேட்டோ அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்றார்.
வரும் மே மாதம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் நேட்டோ நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார் என்று அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நேட்டோ அமைப்பின் தலைமை இயக்குநர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்குடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பல்வேறு விவகாரங்களைக் குறித்து இருவரும் பேசினர். ரஷியா - உக்ரைன் எல்லையோரப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புக்கு நேட்டோவின் பங்களிப்பு, நேட்டோ ராணுவ ஒத்துழைப்புக்கான நிதி உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசினர்.
நேட்டோ அமைப்பின் நிதிச் சுமையை அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் சமமான அளவில் ஏற்க வேண்டியது குறித்தும் அவர்கள் பேசினர். சர்வதேச அமைதியை முன்னிட்டு, ரஷியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் வலியுறுத்தினார்.
நேட்டோ உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. அதில் டிரம்ப் கலந்து கொள்ள வேண்டும் என்று நேட்டோ தலைமை இயக்குநர் அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பை அமெரிக்க அதிபர் ஏற்றார்.
இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அன்றைய சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை எதிர்க்க மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் நேட்டோ அமைப்பை ஏற்படுத்தின. ராணுவ ஒத்துழைப்பை வலியுறுத்தும் அந்த அமைப்பு தற்கால சர்வதேச அரசியல் சூழலுக்கு ஒவ்வாதது என்று டிரம்ப் கூறி வருகிறார்.
மேலும், நேட்டோ அமைப்பின் விதிமுறைகளின் கீழ், ராணுவ ஒத்துழைப்புக்கு அமெரிக்கா பெரும் தொகையை ஒதுக்கி வருகிறது. இந்த ஏற்பாட்டை மாற்றப் போவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். தங்களின் பாதுகாப்புக்கு நேட்டோ பிற உறுப்பு நாடுகள் கூடுதல் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.
அதிநவீன ஏவுகணைகளுடன் சீன ராணுவம் போர் பயிற்சி
ஆயிரம் கி.மீ. தொலைவு பறந்து சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளுடன் சீன ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டது.
இது தொடர்பாக அரசு நாளிதழான "சைனா டெய்லி' தெரிவித்திருப்பதாவது:
சீன ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு விதமான தாக்குதல்களை சமாளிக்கும் திறனுக்கான போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்களைக் கொண்டு எதிரிகள் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
செயற்கைக்கோள் மூலம் எதிரிகள் கண்காணிப்பதை தடுப்பது, எதிரியின் மின்னணுத் தகவல்களை முடக்குவது போன்ற பயிற்சிகள் இடம் பெற்றன.
சீன ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணைப் பிரிவும் இதில் கலந்து கொண்டது. அதிநவீன டிஎப்-16 ரக ஏவுகணைகளுடன் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏவுகணை ஆயிரம் கி.மீ. தொலைவு பறந்து சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
சீனா வடிவமைத்து உருவாக்கிய அதிநவீன டிஎப்-16 ஏவுகணைகள் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்றன. அந்த ஏவுகணையின் முழுத் திறன் குறித்து எந்த விவரத்தையும் சீன ராணுவமோ அரசோ வெளியிடவில்லை.
ஆனால் அவை இலக்கை நிர்ணயித்து செலுத்தக் கூடிய திறன் கொண்டவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். தரையிலிருந்தும், கடலில் இருந்தும் அந்த ஏவுகணையைச் செலுத்த முடியும். டிஎப்-16 ஏவுகணைகளால் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள இலக்குகளைத் தாக்க இயலும்.

இந்தியா:

39 எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்துள்ளனர்: மத்திய அரசு
கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பியளித்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் திங்கள்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:
எழுத்தாளர்களின் கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை பாதிக்கப்பட்டதாகவும், இது விஷயத்தில் சாகித்ய அகாதெமி அமைப்பு தொடர்ந்து அமைதிகாத்து வருவதாகவும் கூறி பல எழுத்தாளர்களை தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
இந்த முடிவைத் திருப்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாகித்ய அகாதெமி இருமுறை சிறப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளது. இதனை ஏற்று ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நந்த் பரத்வாஜ் மட்டும் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் 280 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கர்நாடகத்தில் எழுத்தாளர் எம்.எம். கலபுர்கி படுகொலை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட மத மோதல் உள்ளிட்ட சம்பவங்களைக் கண்டித்து ஏராளமான எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பி அளித்தனர்.
விமானக் கண்காட்சியில் எச்.ஏ.எல்-இன் புதிய வகை விமானங்கள்
பெங்களூரில் நடைபெற இருக்கும் பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சியில், புதிய வகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை காட்சிப்படுத்த மத்திய அரசின் எச்ஏஎல் நிறுவனம் தயாராகியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், பிப்.14 முதல் 18-ஆம் தேதி வரை 11-ஆவது பன்னாட்டு விமானத் தொழில், ராணுவம், பயணிகள் விமானம், விமான நிலைய உள்கட்டமைப்பு, ராணுவ பொறியியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
இந்தக் கண்காட்சியில் 750-க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. இந்தக் கண்காட்சியைக் காண 5 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம் :

டாடா குழும இயக்குநர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம்
டாடா சன்ஸ் குழும பங்குதாரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அக்குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார்.
அவரை நீக்குவதற்குத் தேவையான அளவுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தது என்று டாடா சன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
டாடா சன்ஸ் குழுமத்தின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சைரஸ் மிஸ்திரியை குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பங்குதாரர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்த சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சைரஸ் மிஸ்திரி வழக்கு தொடுத்தார். முன்னதாக, டாடா குழுமத்தில் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி கடந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி திடீரென நீக்கப்பட்டார். குழுமத்தின் தாற்காலிகத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment