Friday 3 February 2017

4TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

மதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய திட்டம்
 மதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை அமல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.


மெக்ஸிகோ எல்லையில் சுவர், அகதிகள், முஸ்லிம் பயணிகளுக்கு தடை என அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அதிபர் ட்ரம்ப், ‘மதச் சுதந்திரம்’ என்ற பெயரில் புதிய மசோதாவை வரையறுத்துள்ளார்.
அமெரிக்காவில் மத அமைப்புகள், மதம் சார்ந்த அறக்கட்டளைகள், தேவாலயங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்தத் தடையை நீக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அண்மையில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவில் மதச் சுதந்திரம், உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை விரைவில் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதிய மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவின் நகல் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அதன்படி, மத அமைப்புகள் அரசியல் ஈடுபடலாம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கலாம். நிதியுதவி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தகவல் உரிமை சட்டம் அமல்
இலங்கையில் தகவல் உரிமை சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தகவல் உரிமை சட்ட அமலாக்கத்துக்கு முன்னோடியாக, அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கும் அதிகாரிகள், தகவல் வரையறைகள் தொடர்பான விவரங்கள் இலங்கை அரசிதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பல்வேறு அரசுத் துறைகள், அதிகாரிகள் தகவல் வெளியிடுவது குறித்து இதற்கு முன் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் புதிய சட்டம் ரத்து செய்கிறது. அதிபர், பிரதமரின் நிதி செயல்பாடுகள், சொத்துகள், அரசியல் கட்சிகளின் சொத்துகள், நிதி செயல்பாடுகள் உள்ளிட்ட விவரங்களைப் புதிய சட்டத்தின் கீழ் பெற இயலும். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு அதிகபட்சமாக 28 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

தமிழகம்:

மின் வாரியத்தில்  உதவிப் பொறியாளர் பணி: தேர்வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் 750 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனத்தில் நிரப்புவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகமானது 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில், ஏற்கெனவே "அப்ரன்டீஸ்'-ஆக பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில், எழுத்து, நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராகவும், பயிற்சி முடித்த தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரியும் எம்.ரமணி உள்பட 51 பேர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ""மற்ற தகுதிகள் சமமாக இருந்தாலும், பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த அடிப்படையில் மற்ற தகுதிகளும் மனுதாரர்களுக்குச் சமமாக இருக்க வேண்டும். மாறாக எந்த சிறப்புரிமையும் கோர முடியாது. எனவே, இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றார்.

விளையாட்டு :

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யூகி பாம்ப்ரி வெற்றி!
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் ஆசிய-ஓசியானியா குரூப் 1 சுற்று புணேவில் இன்று தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாளில் ஆடவர் ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதல் ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 368-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் முதல் நிலை வீரரான (சர்வதேச தரவரிசை 414) ஃபின் டியர்னியை எதிர்கொண்டார். இதில் யூகி பாம்ப்ரி, 6-4, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் முதல் ஒற்றையர் ஆட்டத்தை வென்றார்.
இதையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய நடுவர் லூ ரோவன் காலமானார்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவரான லூ ரோவன் (91) சிட்னியில் வெள்ளிக்கிழமை காலமானார்.
25 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ள ரோவன், 1971-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதியது) நடுவராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
1971-இல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஸ்நோ, ஆஸ்திரேலிய வீரர் டெர்ரி ஜென்னரை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசினார். இதையடுத்து ஜான் ஸ்நோவை எச்சரித்தார் நடுவர் ரோவன்.
இதன்பிறகு பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்த ஜான் ஸ்நோ, ஆஸ்திரேலிய ரசிகர்களின் தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து அப்போதைய இங்கிலாந்து கேப்டன் இல்லிங்வொர்த் தனது வீரர்களுடன் மைதானத்தின் மத்தியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

வர்த்தகம் :

தேசிய பங்குச் சந்தையின் புதிய தலைவர் விக்ரம் மாயே
உலகின் முன்னணி பங்குச் சந்தைகளுள் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ.) புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக விக்ரம் மாயே தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா திடீரென பதவி விலகினார். இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேசிய பங்குச் சந்தையின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக விக்ரம் மாயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை அசோக் சாவ்லா தலைமையிலான தேசிய பங்குச் சந்தையின் நிர்வாகக் குழு வழங்கியது. இந்த நியமனத்துக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபியின் ஒப்புதலையும் பெற வேண்டியதுள்ளது.
இதையடுத்து, வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்ரம் மாயே தற்போது ஐ.டி.எப்.சி. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.10,000 கோடியை திரட்ட தேவையான நடவடிக்கைகளை தேசிய பங்குச் சந்தை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment