Wednesday 15 February 2017

16TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஐ.நா. அமைதிப் படைக்கு புதிய தலைவர் நியமனம்
ஐ.நா. அமைதிப் படையின் புதிய தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸை (56) ஐ.நா. பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.


பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஐ.நா. விவகாரங்களுக்கான இயக்குநராகப் பணியாற்றி வரும் ஜீன்-பியர் லாக்ரோயிஸ், ஐ.நா. அமைதிப் படைத் தலைவராக பொறுப்பு வகிப்பார்.
6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை வகித்து வரும் ஹெர்வ் லாட்சூஸ், வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜீன்-பியர்லாக்ரோயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ஜெஃப்ரி ஃபெல்ட்மேனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு அடுத்தபடியாக, ஐ.நா. அமைதிப் படைத் தலைவர் மற்றும் ஐ.நா. அரசியல் விவகாரத் தலைவர் பதவி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
பல்வேறு நாடுகளில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்தப் படையின் தலைவராக ஜீன்-பியர் லாக்ரோயிஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூத்த பத்திரிகையாளர் டி.வி. பரசுராம் காலமானார்
மூத்த பத்திரிகையாளர் டி.வி. பரசுராம் (93) உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அமெரிக்காவில் 1950-களில் பிடிஐ செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் டி.வி. பரசுராம். நீண்டகாலமாக பிடிஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய பரசுராம், பின்னர் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கிலப் பத்திரிகையில் அமெரிக்க செய்தியாளராக பணியில் சேர்ந்தார்.
சுமார் 20 ஆண்டுகளாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் பணியாற்றிய அவர், தனது 58-ஆவது வயதில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வாஷிங்டனில் பிடிஐ செய்தி நிறுவனத்திலேயே சிறப்புச் செய்தியாளராக பணியில் சேர்ந்தார்.
பத்திரிகைத் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக "ஹாவர்டு நீமேன்' உள்ளிட்ட பல விருதுகளை பரசுராம் பெற்றுள்ளார். பல்வேறு அமெரிக்க அதிபர்களின் செய்தியாளர்கள் சந்திப்புகளில் பரசுராம் பங்கேற்றிருக்கிறார். தனது 82-ஆம் வயது வரை பத்திரிகையாளராக அவர் பணியாற்றினார்.
இதனிடையே, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற அவர் வாஷிங்டனில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சிறிது காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரசுராம் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு அனந்த லட்சுமி என்ற மனைவியும், அசோக் பரசுராம் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா:

இஸ்ரேல் , அமெரிக்காவுக்கு சவால்விடும் கார்ட்டோசாட்
இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளுக்கே தொழில்நுட்பத்தில் சவால்விடும் வகையில் செயல்பட்டு வருகிறது.
கார்ட்டோசாட் விவரங்கள்:
கார்ட்டோசாட்-1: 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி ஏவப்பட்ட கார்ட்டோசாட் வரிசையின் முதல் செயற்கைக்கோளாகும். இந்தச் செயற்கைக்கோள் ஒட்டுமொத்த பூமியையும் 126 நாள் சுழற்சியில் 1867 சுற்றுப்பாதைகளில் படம்பிடித்து முடிக்கிறது.
புவிப்பகுதியை இக்கருவிகள் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுத்து வந்தன.
இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எடுக்கும் திறன் கொண்டவை. இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள் காலம் முடிந்துவிட்டது.
அரசு இணையதள பக்கத்தில் இருந்து மோடி படத்தை நீக்க உத்தரவு
பிரதமரின் வீட்டு வசதித் திட்ட இணையதளப் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் படங்களை நீக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மக்களவைச் செயலர் பி.கே.சின்ஹாவுக்கு தேர்தல் ஆணையம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கான இணையதளப் பக்கத்தில் பாஜகவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளதாகப் புகார் கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், அவ்வாறு தலைவர்களின் படங்கள் இடம்பெறுவது தேர்தல் விதி மீறலாகும்.
எனவே, அந்த இணையதளப் பக்கத்தில் இருந்து மோடி, வெங்கய்ய நாயுடு ஆகியோரின் படங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதேபோல், மற்ற துறைகளின் இணையதளப் பக்கங்களிலும், இதுபோன்ற படங்கள் இடம்பெறாததை உயரதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு கடந்த ஜனவரி 4-ஆம் தேதிக்கு முன்பே, இதை ஏன் செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க பிரத்யேக செயலி!
செல்லிடப்பேசி வாயிலாக வருமான வரி செலுத்தவும், பான் எண் வேண்டி விண்ணப்பிப்பதற்கும் பிரத்யேக செயலி ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஆண்டுதோறும் 2.5 கோடி பேர் நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை வேண்டி விண்ணப்பிக்கின்றனர். நாடு முழுவதும் தற்போது 25 கோடிக்கும் அதிகமானோருக்கு பான் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கும்போதும், ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலுத்தும்போதும் பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு அந்தச் செயலி விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இந்தச் செயலியின் வாயிலாக விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களுக்குள் பான் எண் வழங்கப்படும். ஆதார் சுய விவரங்களான கைவிரல் ரேகை, கருவிழிப் படலப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு பான் எண் வழங்கப்படும்.

விளையாட்டு :

'சிறந்த விளையாட்டு வீரர்' விருது வென்றார் உசேன் போல்ட்: வீராங்கனை பிரிவில் சைமன் பில்ஸ் தேர்வு
உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், 2017-ஆம் ஆண்டுக்கான "சிறந்த விளையாட்டு வீரர்' விருதும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பில்ஸ் "சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதும் வென்றுள்ளனர்.
இதில் உசேன் போல்ட், 4-ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த விருதை 4 முறை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அலைச் சருக்கு (சர்ஃப்) வீரர் கெல்லி ஸ்லேட்டர் ஆகியோரின் வரிசையில் உசேன் போல்ட் இணைந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு "லாரஸ்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. விளையாட்டு உலகின் "ஆஸ்கார்' விருதாக மதிக்கப்படும் இந்த விருது, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கும் விழா ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஜமைக்க ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது.

வர்த்தகம் :

டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு
டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
இந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடி பங்குகளும் வர்த்தகமானது.

Click here to download 16th February Review in tamil

No comments:

Post a Comment