Monday 20 February 2017

19TH & 20TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு :

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு
பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி(36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2010-இல் ஓய்வு பெற்றுவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்வதாக அவர் அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடியை ’பூம் பூம்’ என்ற புனைப்பெயரில் ரசிகர்கள் அழைப்பதுண்டு.
பாகிஸ்தான் அணிக்காக 98 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள அப்ரிடி 1,405 ரன்கள் மற்றும் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அடுத்த 2 ஆண்டுகள் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

உலகம்:

மே மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி
இலங்கையில் நடைபெறவுள்ள “புத்த பூர்ணிமா’ விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே மாதம் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
புத்த பூர்ணிமா விழா, பெளத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் முழு பெளர்ணமியை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை, விசாக நாளாக ஐ.நா. சபை அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், பெளத்த நாடுகளில் ஒன்றான இலங்கை அரசு, முதல்முறையாக இந்த விழாவை, வரும் மே மாதம் 12-ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதை பிரதமர் மோடி உறுதி செய்திருப்பதாக, இலங்கை அமைச்சர் விஜயதாசா ராஜபட்ச கூறியுள்ளார் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில், இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ், திபெத், பூடான், மங்கோலியா மற்றும் பெளத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்’: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்குத் தாற்காலிகத் தடை விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, அதிபரின் உத்தரவுக்கு மாகாண முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், குடியேற்றத் தடை தொடர்பாக புதிய சட்டத்தை விரைவில் இயற்றப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா:

மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
ஆனால், தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததாலும், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாகவும், ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8-ஆம் தேதி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை தளர்த்தி அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தியது.
தபால் நிலையங்களில் இனி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: புதிய முறை அடுத்த மாதம் அமல்
தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் புதிய முறை அடுத்த மாதம் அமலுக்கு வரவிருக்கிறது.
நாடு முழுவதும் பொது மக்களுக்கு கடவுச்சீட்டை அளிக்கும் பணியை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் தற்போது 38 கடவுச்சீட்டு அலுவலகங்களும், 89 கடவுச்சீட்டு சேவை அளிக்கும் மையங்களும் (பிஎஸ்கே) செயல்பட்டு வருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்த அலுவலகங்கள், மையங்கள் மூலம் 1.15 கோடி பேருக்கு புதிதாக கடவுச்சீட்டுகளும், கடவுச்சீட்டு தொடர்பான சேவைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நாடு முழுவதும் இருக்கும் கடவுச்சீட்டு மையங்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், எளிதில் கடவுச்சீட்டுக்கு மக்கள் விண்ணப்பிக்க வசதியாகவும் தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறையை வெளியுறவு அமைச்சகம் அடுத்த மாதம் அமல்படுத்தப்படவுள்ளது.
நாகாலாந்து முதல்வர் திடீர் ராஜிநாமா
நாகாலாந்து முதல்வரும், நாகா மக்கள் முன்னணி கட்சியின் மூத்த தலைவருமான டி.ஆர்.ஜெலியாங், திடீரென ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்தத் தகவலை அந்த மாநில முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
பாஜக-நாகா மக்கள் முன்னணி கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.
இந்தக் கூட்டத்துக்கு முன்பு நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
நாகா மக்கள் முன்னணி தலைமையிலான நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு பழங்குடியினர் போராட்டம் நடத்தினர்.
அவர்களைக் கலைக்க முயன்றபோது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் ஜெலியாங் பதவி விலக வேண்டும் என்று கோரி பழங்குடியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பி.எஃப். தொகையைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை மே மாதம் அறிமுகம்
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத்திய பணம், ஓய்வூதிய முதிர்வுத் தொகை, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை இணையதளம் மூலமாக விண்ணப்பித்துப் பெறும் வசதி, வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது காப்பீட்டுத் தொகை, முதிர்வுத்தொகை ஆகியவற்றை கோரி, சுமார் ஒரு கோடி விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (இ.பி.எஃப்.) கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த விண்ணப்பங்களை இ.பி.எஃப். அமைப்பின் ஊழியர்கள் சரிபார்த்து, சந்தாதாரர்களுக்கு உரிய தொகையை வழங்குவதற்கு கால தாமதமாகிறது. எனவே, அவர்களுக்கு தாமதமின்றி சேவைகளை வழங்குவதற்காக, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, இ.பி.எஃப். ஆணையர் வி.பி.ஜாய், கூறியதாவது:
அனைத்து இ.பி.எஃப். அலுவலகங்களும் இன்னும் இரண்டு மாதங்களில் மையக் கணினி அமைப்பு (சர்வர்) மூலம் இணைக்கப்படும். அதன் பிறகு, அனைத்து வகையான விண்ணப்பங்களுக்கும் இணையதளம் மூலமாகவே சேவைகள் அளிக்கப்படும்.
இதற்காக, முதல் கட்டமாக, 50 மண்டல அலுவலகங்கள் தற்போது மையக் கணினி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 123 மண்டல அலுவலகங்களும் மையக் கணினி அமைப்புடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

தமிழகம்:

முதல்வராகப் பொறுப்பேற்றார் பழனிசாமி: அனைத்து அமைச்சர்களும் பணிகளைத் தொடங்கினர்
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்ந்து, மற்ற துறைகளின் அமைச்சர்களும் தங்களது பணிகளை திங்கள்கிழமை (பிப்.20) தொடங்கினர்.
இதையடுத்து, கடந்த 15 நாள்களாக தமிழகத்தில் ஏற்பட்டு வந்த அரசியல் ரீதியான குழப்பங்கள் முடிவுக்கு வந்து, தலைமைச் செயலகத்தில் இயல்பு நிலை திரும்பியது.
சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கடந்த சனிக்கிழமையன்று (பிப்.18) பெரும்பான்மையை நிரூபித்தது. இதன் பின், முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.
5 கோப்புகளில் கையெழுத்து: முதல்வராகப் பொறுப்பேற்க தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன் பின், முதல்வரின் அறைக்குச் சென்ற அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு திட்டங்களில் 5 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் எடப்பாடி கே.பழனிசாமி கையெழுத்திட்டார்.

வர்த்தகம் :

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இன்று பதவியேற்பு
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார்.
முன்னதாக தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் (54) புதிய தலைவராக கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தலைவராக தற்போது பொறுப்பேற்கிறார்.
“சந்திரா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அவர், 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பார்சி இனத்தைச் சாராத முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பணி சவால் நிறைந்து என்று கருத்து தெரிவித்த அவர், அந்த சவாலை மாறுபட்ட வழிமுறையில் திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்திய கோரஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் டாடா ஸ்டீல் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment