Thursday 23 February 2017

23RD FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

பூமியை போன்ற 7 கிரகங்கள் நாசா கண்டுபிடிப்பு
பூமியைப் போன்று 7 கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா'வின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


நமது பூமியில் இருந்து சுமார் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகங்கள் உள்ளன. இவற்றில் 3 கிரகங்களில் தண்ணீர் உறையாமல் நீர்மத்தன்மையுடன் இருப்பதால், உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகளும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினரும் இணைந்து புதிய கோள்கள், அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்நிலையில், பூமியைப் போன்ற அளவும், சில தன்மைகளும் உடைய 7 கிரகங்களை அவர்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்துள்ளனர்.
டிராபிஸ்ட்-1: இந்த 7 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இதற்கு "டிராபிஸ்ட்-1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரம் ஒளிரும் தன்மை சூரியனைவிட 2,000 மடங்கு குறைவு. எனவே, இந்தக் கிரகங்களில் அதிக குளிர் நிலவி வருகிறது. மையமாக அமைந்துள்ள நட்சத்திரத்துக்கு அருகில் உள்ள கிரகத்தில் குளிர் அதிகமாகவும், அடுத்தடுத்து அமைந்துள்ள கிரகங்களில் குளிர் குறைவாகவும் உள்ளது.
வங்கதேசப் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் சந்திப்பு
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்
சீன பயணத்தை முடித்துக் கொண்டு இருநாள் பயணமாக வங்கதேசத்துக்கு சென்ற ஜெய்சங்கர், தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவின் தற்கால நிகழ்வுகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து வங்கதேச அரசின் ஊடகத் துறை துணை செயலாளர் நஸ்ரூல் இஸ்லாம் கூறியதாவது:
இருநாடுகளின் எல்லையில் நிலவி வந்த பிரச்னைகள் உள்பட பல்வேறு விவகாரங்களையும் இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொண்டுள்ளன. இதேபோல எதிர்காலத்திலும் பிரச்னைகள் அனைத்தும் அமைதியாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டுமென்று ஜெய்சங்கரிடம், ஷேக் ஹசீனா கூறினார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் கென்னத் ஆரோ மறைவு
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார மேதை கென்னத் ஜே ஆரோ தனது 95-ஆவது வயதில் காலமானார்.
பொருளாதாரத்துக்காக மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை கொண்ட அவர், சந்தை அபாயங்கள், புத்தாக்கம், சந்தை அடிப்படைக் கணிதவியல் ஆகிவை குறித்து கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார்.
கலிஃபோர்னியா மாகாணம், பாலோ ஆல்டோ நரிலுள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சமநிலைக் கோட்பாடு குறித்த கணிதவியலின் முன்னோடியாகத் திகழ்ந்ததற்காக, கென்னத் ஜே ஆரோவுக்கும், பிரிட்டன் பொருளாதார மேதை சர் ஜான் ஆர். ஹிக்ஸூக்கும் கடந்த 1772-ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு சமமாக பிரித்து வழங்கப்பட்டது.
இந்தியா:
ஜூன் 18-இல் ஐஏஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 18-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வானது, இந்த ஆண்டு முன்கூட்டியே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். ஆகிய ஆட்சிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த தேர்வானது முதல்நிலை, முதன்மை, நேர்முகம் என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
அந்த வகையில், 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு, வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பொதுவாக, இந்த முதல்நிலைத் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே இந்த தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில், அதிகபட்ச வயதானது சில குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்த்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 17 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

பொதுச் சுகாதார அவசரநிலையை சமாளிக்க புதிய மசோதா தயார்
தொற்று நோய்கள் வேகமாகப் பரவுவது, நுண்ணுயிர்களையே பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்துவது போன்ற நேரங்களில் எழக்கூடிய பொதுச் சுகாதார அவசரநிலையின்போது மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரமளிக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக மசோதா குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அறிவதற்காக அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் வேகமாகப் பரவக் கூடிய ஆந்த்ராக்ஸ், பறவைக் காய்ச்சல், டெங்கு, ஹெச்ஐவி/எய்ட்ஸ், மஞ்சள் காய்ச்சல், வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்), பிளேக், சின்னம்மை உள்பட 33 நோய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது தவிர, மக்களிடையே நுண்ணுயிர்களை ஆயுதங்களாகப் பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் டைஃபாய்டு காய்ச்சல், காலரா, பிளேக் உள்ளிட்டவற்றின் பாக்டீரியாக்கள், எபோலா, டெங்கு உள்ளிட்டவற்றின் வைரஸ் கிருமிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பொறுப்பேற்பு
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் இன்று பொறுப்பேற்றார்.
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி. தினகரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றுகொண்டார்.
அப்போது அவருடன், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.

விளையாட்டு :

எஃப்.ஐ.எச். விருது: டோமென், நவோமி தேர்வு
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்.ஐ.எச்.) சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு பெல்ஜியம் கேப்டன் ஜான் டோமென், நெதர்லாந்து வீராங்கனை நவோமி வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ், சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இந்திய வீரர் ஹர்மான்ப்ரீத் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. எனினும் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை.

வர்த்தகம் :

கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான மூலதனம் ரூ.500 கோடியை பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முறையான ஒப்புதல் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ள நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பெறப்பட உள்ளது என்று டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment