Thursday 6 April 2017

6TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.) மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி)  மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “இந்த மசோதாவின் பெருமை ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது ஒரு அரசாங்கத்தையோ சேர்ந்தது அல்ல என்பதை தயக்கமில்லாமல் கூறுவேன்” என்றார்.
ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஜி.எஸ்.டி மசோதா கடந்த மார்ச் 29-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
உலகம் :
தென் கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரம்
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என்று தென் கொரியா அறிவித்தது.
தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹப் இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் விஞ்ஞானிகளின் முயற்சியால் முற்றிலும் தென் கொரியாவில் உருவான புதிய ரக ஏவுகணையின் பரிசோதனையை ராணுவம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இந்தப் புதிய ஏவுகணை 800 கிலோமீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று இலக்கைத் தாக்கக் கூடியது. அதன் சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

தமிழகம்:

பணமில்லா பரிவர்த்தனையில் உர விற்பனை: வேளாண் துறை புதிய திட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனை முறையில் உரங்களை விற்கும் புதிய திட்டத்தை வேளாண் துறை அமல்படுத்தவுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. கனகராஜ் கூறியது: இம்மாவட்டத்தில் நிகழாண்டு ஜூன் முதல் சில்லறை உர விற்பனை நிலையங்களில் ரசாயன உரம் பெறும் விவசாயிகளுக்கு அதற்கான உர மானியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தவுள்ளது. பணமில்லா பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு தடையின்றி எளிதில் மானியம் கிடைக்கவும் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் மே மாதம் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை உர விற்பனையாளர்களும் தங்களது உரம் விற்பனைக்கான உரிமத்தின் 2 நகல், ஆதார் அட்டையின் 4 நகல்கள், உரிமையாளரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 7) ஒப்படைக்க வேண்டும்.

விளையாட்டு:

பாட்மிண்டன் தரவரிசை 2-ஆவது இடத்தில் சிந்து
சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மூன்று இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது, அவருடைய அதிபட்ச தரவரிசையாகும்.
சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய 2-ஆவது இந்திய வீராங்கனையான சிந்து 75,759 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார் சிந்து.
மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் ஓர் இடத்தை இழந்து 9-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சீன தைபேவின் தாய் ஸþ இங் முதலிடத்தில் உள்ளார். ஆடவர் தரவரிசையில் இந்தியர்கள் யாரும் முதல் 10 இடங்களில் இல்லை.

வர்த்தகம் :

அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016 -17 ல் 7.1 சதவீதமாக ஆக இருந்தது. இது ஜி.எஸ்.டி மசோதா மற்றும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் மெதுவாக வளர்ந்து நடப்பு நிதி ஆண்டில் 7.4 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2018ம் ஆண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். மேலும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் மாற்றம் ஏதுமின்றி, 6.25% என்ற முந்தைய அளவிலேயே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்
 
 

No comments:

Post a Comment