Wednesday 26 April 2017

26TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

உயர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரின் பெயர் பரிந்துரை
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் ஜே அமீனின் பெயரை செனட் சபையிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அவரது பரிந்துரையை செனட் சபை ஏற்றுக் கொண்டால், தற்போது அந்தப் பதவி வகிக்கும் டோனியல் மார்ட்டிக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை விஷால் ஜே அமீன் ஏற்பார்
தற்போது நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கும் விஷால் ஜே அமீன், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக் கொள்கை வகுப்புத் துறைகளில் உயர் பதவிகளை வகித்தவர்.
இந்தியா:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கிளார்க் வேலை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிரப்பப்பட உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900.
தகுதி: +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதிகளுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 23.03.2017 தேதியின் படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Section Officer (R-II), 2nd floor, Zakir Husain Khand, NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ncert.nic.in/announcements/oth_announcements/pdf_files/pwd_vacancy_12_4_17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பி.எஃப்.: 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் வீட்டுக் கடன் வசதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்றாண்டு உறுப்பினராக இருந்தால் வீடுகட்ட கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பத்தூர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கேசவராவ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்து வரும் நபர்கள் வீடு கட்டத் தேவையான நிதியை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி வீடு கட்ட, அல்லது கட்டிய வீட்டை வாங்குதல் போன்றவறுக்காக தங்களது பி.எஃப். நிதியை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 044-26350080,26350110,26350120 அல்லது sro.ambattur@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வி.எஸ்.எஸ்.கேசவராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகம்:

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது
எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்ட சுந்தரனார் விருதை, அவரது மகன் ஆர். பிரபாகரனிடம் அளிக்கிறார் துணைவேந்தர் கி.பாஸ்கர்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு 'மனோன்மணியம் சுந்தரனார் விருது' புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு என பல தளங்களில் பங்களிப்பு செய்த பெருந்தகைகளுக்கு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ள சுந்தரனார் அறக்கட்டளையின் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, முதலில் பேராசிரியர் இளைய பெருமாள், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு 2014-15ஆம் ஆண்டுக்கு பிரித்து வழங்கப்பட்டது. பின்னர், 2015-16ஆம் ஆண்டுக்கு தமிழறிஞர் ச.வே.சு. என்கிற ச.வே. சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது. 2016-17ஆம் ஆண்டுக்கான விருது கி. ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு:

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து புதன்கிழமை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
எனினும், சகவீராங்கனையான சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் தினார் தயா அயுஸ்டினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தை 31 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்த சிந்து, 21-8, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில், போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனையான சாய்னா, ஜப்பானின் சயாகா சாடோவுடன் மோதினார். இதில் 19-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான இந்த ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்தப் போட்டியின் முந்தைய சீசன்களில் சாய்னா 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐஓசி ஆணையங்களின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) 2 ஆணையங்களுக்கான உறுப்பினராக நீதா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் 26 ஆணையங்கள் உள்ளன. அவற்றில் 2017-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் கல்வி ஆணையம் மற்றும் ஒலிம்பிக் தொலைக்காட்சி சேனல் ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில், அமெரிக்க ஒலிம்பிக் சங்கத் தலைவர் லாரன்ஸ் ஃபிரான்சிஸ் பிரோப்ஸ்ட் தலைமையிலான ஒலிம்பிக் சேனல் குழுவில் நீதா அம்பானியுடன் சேர்த்து 16 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருந்த சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பிலிப் கிரேவனுக்கு பதிலாக, தற்போது நீதா அம்பானி உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

வர்த்தகம் :

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
புதிய ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.10 நாணயம் வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தை ரிசர்வ் வங்கி புழக்கத்துக்குக் கொண்டுவரவுள்ளது.
சிறப்பு மிக்க நிகழ்வுகளைப் போற்றும் விதமாக, அவை தொடர்பான உருவங்கள் பொறித்த புதிய நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் விரைவில் வெளியாகவுள்ள புதிய ரூ.10 நாணயத்தில் தேசிய ஆவணக் காப்பகக் கட்டடத்தின் உருவம் இடம்பெற்றிருக்கும். அதனுடன் 125 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்ட இலச்சனையும் பொறிக்கப்பட்டிருக்கும். புதிய ரூ.5 நாணயத்தைப் பொருத்தவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உருவமும், 1866-2016 (150 ஆண்டுகள்) என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment