Monday 3 April 2017

1ST APRIL - 3RD APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

இந்திய ஓபன்: சிந்து சாம்பியன்
இறுதி ஆட்டம் சிறப்பான ஒன்று. அதில், முதல் செட்டை வென்றது திருப்புமுனையாக அமைந்தது. எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. -பி.வி.சிந்து.


இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சிந்து 21-19, 21-16 என்ற நேர் செட்களில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்தார்.
இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவுக்கு மத்தியில் இறுதிச் சுற்றில் களமிறங்கிய சிந்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அதிவேக ஷாட்களை ஆடிய சிந்து, முதல் செட்டின் ஆரம்பத்திலேயே 6-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட கரோலினா, மெதுவாக பின்னடைவிலிருந்து மீண்டார்.

மியாமி மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஃபெடரர் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் செட்டில் 8-ஆவது கேம் வரை இருவரும் சமநிலையிலேயே இருந்தனர். 9-ஆவது கேமில் நடாலின் சர்வீஸை முறியடித்த ஃபெடரர், 10-ஆவது கேமோடு முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் அந்த செட் 6-4 என்ற கணக்கில் ஃபெடரர் வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 9-ஆவது கேமில் நடாலின் சர்வீஸை முறியடித்த ஃபெடரர், 10-ஆவது கேமில் தனது சர்வீஸை தக்கவைத்ததன் மூலம் அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
சைரஸ் போன்சாவுக்கு ஆசியாவின் சிறந்த பயிற்சியாளர் விருது
இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா, 2016-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கு 7 நாடுகளைச் சேர்ந்த 13 பயிற்சியாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிறந்த பயிற்சியாளராக போன்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போன்சாவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, உலக ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலத்தையும் வென்றது. இதுதவிர ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளியும், இந்திய ஆடவர் அணி வெண்கலமும் வென்றது. கடந்த ஆண்டு மேலும் பல போட்டிகளில் இந்திய அணி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

உலகம் :

ஈக்வடார் அதிபராக லெனின் மொரீனோ தேர்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான லெனின் மொரீனோ வெற்றி பெற்றார்.
பதிவான வாக்குகளில் 94 சதவீத அளவு எண்ணப்பட்ட நிலையில் லெனின் மொரீனோ வெற்றி பெற்றதாக அந்த நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்தது. மொரீனோ 51 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கில்லர்மோ லாúஸா 49 சதவீத வாக்குகள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கில்லர்மோ லாúஸா அந்த முடிவை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், தேசிய தேர்தல் கவுன்சில் தனது கோரிக்கையை ஏற்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பு வரையில், பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் வலதுசாரி வேட்பாளரான லாúஸாதான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்தது.
அண்ட வெளியில் பேரொளியுடன் வெடிப்பு: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
அண்ட வெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதையும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக நாசா அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் "சந்திரா களம்-தெற்கு' என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை எங்கள் அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுகிறது. இது ஒரு அழிவுச் செயல் ஒன்றின் விளைவாக இருக்கக் கூடும். எனினும் இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை.

இந்தியா:

இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்
இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாரக் ரக நவீன ஏவுகணைகளை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.860 கோடி மதிப்பில் பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டங்களில், இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ரூ.500 கோடி மதிப்பில் தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையான பாரக் ஏவுகணையை வாங்கும் திட்டமும் ஒன்றாகும். இந்திய கடற்படையில் உள்ள அனைத்துப் போர்க் கப்பல்களிலும் இந்த ஏவுகணையை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துணை குடியரசுத் தலைவர் - பிரதமர் மோடியுடன் ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு
இந்தியா வந்துள்ள ஓமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை தில்லியில் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது ஓமன் நாட்டுனான உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே கடந்த 2015-16ம் ஆண்டில் 3.86 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஓமனில் 6 லட்சத்து 88 ஆயிரம் புலம்பெயர் இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 அதிகாரி பணி: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2017- 18-ஆம் ஆண்டிற்கான 2510 இளநிலை டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜுனியர் டெலிகாம் அதிகாரி (Junior Telecom Officer )
மொத்த காலியிடங்கள்: 2,510. (தமிழகத்திற்கான காலியிடங்கள் 103)
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: பொறியியல் துறையில் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், வானொலி, கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.எஸ்சி (எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்
தேர்வுசெய்யப்படும் முறை : 2017 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் தனிப்பட்ட தேர்வுகளை நடத்துவது கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalbsnlexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/documents/GATE_JTODR_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை
பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
பணி: புரபேஷனரி அதிகாரி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 400
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்
கல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்)
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017
எழுத்து தேர்வு நடைபெறு தேதி: 27.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/Careers/Admission-2017-18.asp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழகம்:

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி, புதன்கிழமை பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கௌல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திரா பானர்ஜிக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

வர்த்தகம் :

பாதுகாப்புப் பெட்டக வசதி, காசோலைகளுக்கான கட்டணம் உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
பாரத ஸ்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு பெட்டகத்துக்கான வாடகைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பெட்டகத்தை கட்டணமின்றி பயன்படுத்தும் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment