Monday 8 May 2017

8TH MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

பிரான்ஸ் அதிபராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார் மேக்ரான்
இரண்டாவது உலகப் போரில் நாஜிக்களை நேசப் படைகள் தோற்கடித்ததன் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி பாரீஸில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு வாழ்த்து
பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றில் அமோக வெற்றி பெற்ற ஆன் மார்ச் கட்சியைச் சேர்ந்த இமானுவல் மேக்ரான் (39), அந்நாட்டு அதிபராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவிருக்கிறார்


இதுகுறித்து தற்போதைய அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை கூறியதாவது:
அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடங்கும்.
புதிய அதிபர் இமானுவல் மேக்ரான், அதிபர் மாளிகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொள்வார் என்றார் அவர்.
இரண்டாவது உலகப் போரில் நாஜிக்களை நேசப் படைகள் தோற்கடித்ததன் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹொலாந்த் பங்கேற்றார்.
அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இமானுவல் மேக்ரானை அவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிரான்சுவா ஹொலாந்த் அமைச்சரவையிலிருந்து இமானுவல் மேக்ரன் விலகியதற்குப் பிறகு, இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-ரஷியா கூட்டாக இணைந்து 5-ஆவது தலைமுறை போர்விமானம் தயாரிப்பு: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா-ரஷியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து 5-ஆவது தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கவுள்ளன. இதுதொடர்பான விரிவான வடிவமைப்புத் திட்டத்தை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் விரைவில் கையெழுத்திடவுள்ளன.
இந்திய-ரஷிய அரசுகளுக்கு இடையே கடந்த 2007-ஆம் ஆண்டில் 5-ஆவது தலைமுறை போர் விமானத்தைத் தயாரிப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த விமானத்தின் முதல்கட்ட வடிமைப்புத் திட்டத்துக்கு, இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,890 கோடி அளிக்க ஒப்புக் கொண்டது. எனினும், அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பல்வேறு காரணங்களுக்காக முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், இந்தத் திட்டத்துக்கு தனது ஒப்புதலை அளித்தார். இதைத் தொடர்ந்து, 5-ஆவது தலைமுறை போர் விமானம் தயாரிப்பு தொடர்பாக இந்தியாவும், ரஷியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கின. அப்போது இந்தியத் தரப்பில், 5-ஆவது தலைமுறை போர் விமானத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் அந்த விமானத்தை இந்தியாவால் மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தியா:
தில்லியில் இன்று செம்மொழி விருதுகள் வழங்கும் விழா: குடியரசுத் தலைவர் வழங்குகிறார்
தமிழறிஞர்கள் சோ.ந. கந்தசாமி, அ. தட்சிணாமூர்த்தி, இரா, கலைக்கோவன் ஆகியோருக்கு மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அறிவித்த தொல்காப்பியர் விருதுகளையும், 15 பேருக்கு இளம் அறிஞர் விருதுகளையும் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (மே 9) நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.
செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆற்றியோருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் விருதுகளை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பண்டைக்காலம் தொடங்கி கி.பி. 600 வரையிலான தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டடவியல், தொல்பொருளியல், நாணயவியல், கல்வெட்டியல், சுவடியியல், பண்பாடு முதலிய துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிகழ்த்தியோர் விருது பெறத் தகுதி உடையவர்.
தமிழியல் ஆய்வியல் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்திய தமிழறிஞருக்கு ஆண்டுதோறும் நினைவுப் பரிசும், ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கு நினைவுப் பரிசும், ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய குறள்பீடம் விருது வழங்கப்படுகிறது.
இலங்கைக்கு 11-ஆம் தேதி செல்கிறார் பிரதமர் மோடி: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையில் வரும் 11-ஆம் தேதி முதல் இருநாள்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய அரசு அதிகாரிகள் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இலங்கையில் ஐ.நா. சபை சார்பில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சர்வதேச விசாக தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சர்வதேச புத்த மத மாநாடும் நடைபெறுகிறது. இதில் 100 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் விசாக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்கிறார். மத்திய மாகாணமான கண்டிக்கும் மோடி செல்லவுள்ளார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அவர் உரைநிகழ்த்த இருக்கிறார்.

தமிழகம்:

விழிப்புப் பணி ஆணையாளராக நிரஞ்சன் மார்டி பொறுப்பேற்பு
தலைமைச் செயலாளர் வசமிருக்கும் விழிப்புப் பணி ஆணையாளர் பொறுப்பு, உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறுப்பை அவர் அண்மையில் ஏற்றுக் கொண்டார். அதிகாரிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள லஞ்சப் புகார்களை விசாரிக்கும் பொறுப்பு விழிப்புப் பணித் துறையைச் சேர்ந்தது. இந்தத் துறையை தலைமைச் செயலாளராக இருக்கும் அதிகாரியே கூடுதல் பொறுப்பாக வைத்திருப்பார். அதன்படி, தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் அந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்த நிலையில், அண்மையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்ற நிரஞ்சன் மார்டியிடம் விழிப்புப் பணி ஆணையாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் பொறுப்பை அவர் அண்மையில் ஏற்றுக் கொண்டார்.
நீட் தகுதித் தேர்வு: 10 மையங்களில் 8000 மாணவ, மாணவியர் எழுதினர்
புதுச்சேரியில் மொத்தம் 10 மையங்களில் இன்று நடைபெற்ற நீட் தகுதித் தேர்வில் 8000 மாணவ, மாணவியர் பங்கேற்று எழுதினர்.
இளங்கலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகம், புதுவை உட்பட நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு 104 நகரங்களில் இன்று நடைபெற்றது. மொத்தம் 2200 மையங்களில் 11.35 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகத்தில் 8 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 88 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர். புதுச்சேரியில் 10 மையங்களில் 8 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்று எழுதினர்.
பல்வேறு தனியார் கல்லூரிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய மையங்களில் காலை  6 மணி முதலே மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இதன் காரணமாக தேர்வு எழுதும் மையங்களின் முன்பு போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.
தேர்வு எழுதிவந்த மாணவர்களின் பெல்ட் , ஷூ , வாட்ச் போன்றவற்றை அகற்றிவிட்டு தான்  அனுமதித்தனர். இதேபோல மாணவிகள்  வாட்ச் , பொட்டு, கம்மல், மூக்குத்தி ,  ஹேர்பின்  உட்பட அணிகலங்களை கழற்றிவிட்டு தேர்வு அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு அதிகாரிகளின் இந்த கெடுபிடி காரணமாக அனைத்து மையங்களிலும் தேர்வு அதிகாரிகள், பெற்றோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும்  கட்டுப்பாடு என்ற பெயரில் அதிகாரிகள் கடும்  தொல்லை கொடுத்ததாக  மாணவர் மற்றும் பெற்றோர்கள்  புகார் தெரிவித்தனர். புதுச்சேரி அரசு நீட் தேர்வு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் தேர்வு தள்ளிவைக்கப்படும் என்று இருந்ததால் தேர்வுக்கு தயாராகவில்லை என்று அரசை குற்றம் சாட்டினர் .

விளையாட்டு:

பிரேசில் ஓபன் இறுதிச் சுற்றில் அமல்ராஜ் தோல்வி
பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அமல்ராஜ் தோல்வி கண்டார்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் அமல்ராஜ்
12-14, 9-11, 7-11, 5-11 என்ற செட் கணக்கில் பிரேசிலின் கால்டிரானோ ஹியூகோவிடம் தோல்வி கண்டார். கடந்த வாரம் நடைபெற்ற சிலி ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய அமல்ராஜ், அதில் சகநாட்டவரான செளம்யஜித் கோஷிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் :

ஐஓபி நிர்வாக இயக்குநராக சுப்ரமணியகுமார் பொறுப்பேற்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) புதிய நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரியாக ஆர்.சுப்ரமணியகுமார் வெள்ளிக்கிழமை (மே 5) பொறுப்பேற்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு பொறுப்பு களை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் வகித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த ஆண்டு செப்.29 ஆம் தேதி செயல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி முதல் நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த அவர், வங்கியின் வளர்ச்சிக்கு பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

No comments:

Post a Comment