Thursday 25 May 2017

26th MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்க சஹாரா குழுமம் முடிவு
வெளிநாடுகளில் உள்ள 3 ஹோட்டல்களையும், இந்தியாவில் உள்ள 30 சொத்துகளையும் விற்க சஹாரா குழுமம் முடிவு செய்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.7,500 கோடியாகும்.
உள்நாட்டில் உள்ள சொத்துகளை வாங்க 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், தனிநபர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், டாடா, அதானி, கோத்ரெஜ், பதஞ்சலி ஆகிய நிறுவனங்களும், பல்வேறு கட்டுமான நிறுவனங்களும் முன்னிலையில் உள்ளன.
முன்னதாக, முதலீட்டாளர்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்த வழக்கில், சஹாரா நிறுவனத்தின் சொத்துகளை விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.5,092 கோடியை இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சொத்துகளை விற்க சஹாரா குழுமம் முடிவெடுத்துள்ளது.
மேலும், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் ஜூன் 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். அதற்கு முன்பு, சுப்ரதாராய் ரூ.1,500 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும்.
இந்திய - சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி நிறைவு


சிங்கப்பூரில் ஒரு வாரம் நடைபெற்ற இந்திய - சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவுற்றது.
இதுகுறித்து சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2017-ஆம் ஆண்டுக்கான இந்திய - சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது. இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரின் எஃப்-15 விமானங்கள் முதல் முறையாகப் பங்கேற்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா - சாங்கி கடற்படைத் தளத்திலும், தென் சீனக் கடல் பகுதியிலும் இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 1994-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இந்தக் கூட்டுப் பயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 24-ஆவது முறையாக இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரின் ஹெலிகாப்டருடன் கூடிய ஆர்எஸ்எஸ் ஃபர்மிடபிள், ஏவுகணை வீசும் திறன் கொண்ட ஆர்எஸ்எஸ் விக்டரி ஆகிய போர்க் கப்பல்கள் பங்கேற்றன.
இந்தியா:
18 டீசல் என்ஜின்களை மியான்மருக்கு ஏற்றுமதி செய்கிறது ரயில்வே
இந்திய ரயில்வே 18 நவீன ரக டீசல் என்ஜின்களை மியான்மருக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூ.200 கோடியாகும்.
இந்த ரயில் என்ஜின்கள் அனைத்தும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ரயில் என்ஜின் தயாரிப்பு மையத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக 6 ரயில் என்ஜின்கள் அடுத்த மாதம் மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. மீதமுள்ள 12 என்ஜின்களும் டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறைந்த எரிபொருள் செலவில் அதிக சக்தியுடன் செயல்படுவது, சிறப்பான பிரேக் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்களை மியான்மர் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து வாங்கி வருகிறது.
மியான்மருக்கு மட்டுமின்றி இலங்கை, வங்கதேசம், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்திய ரயில்வேயின் உற்பத்தி மையங்கள்தான் என்ஜின்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

விளையாட்டு:

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன்: காலிறுதியில் இன்று இந்தியா-சீனா மோதல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.
சுதிர்மான் கோப்பை போட்டியில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியிருப்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியிருந்த இந்தியா, அதில் சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டான் அல்லது நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லீட்ஸ் நகரில் புதன்கிழமை பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்தில் கேப்டன் இயான் மோர்கன் அதிகபட்சமாக 93 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் அடித்தார்.
தொடக்க வீரர் ஜேஸன் ராய் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, உடன் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 60 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 37, பென் ஸ்டோக்ஸ் 25, ஜோஸ் பட்லர் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

வர்த்தகம் :

விஸ்டாரா சேவையில் முதல் ஏ320 நியோ விமானம்
விஸ்டாரா நிறுவனத்தின் விமான சேவையில் முதலாவது ஏ320நியோ ரக விமானம் புதன்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டது.
டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐ.ஏ.) கூட்டு நிறுவனமான விஸ்டாராவின் தலைமைச் செயல் அதிகாரி பீ டெய்க் இயோ கூறியதாவது:
அதிக எரிபொருள் சிக்கனம், அதிக இருக்கை வசதிகள் கொண்ட ஏ320நியோ ரக விமானங்களால் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான அளவில் மேம்படும். அதேநேரம், செலவினமும் கணிசமாக குறையும் என்று அவர் தெரிவித்தார்.
விஸ்டாரா நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பி.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 20 ஏர்பஸ் ஏ320 விமானங்களையும், 13 ஏ320சியோ விமானங்களையும், 7 ஏ320நியோ விமானங்களையும் வாங்குவதாக அறிவித்தது.
அதன்படி, 13 ஏ320சியோ விமானங்களை விஸ்டாரா நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணிகள் கடந்தாண்டு அக்டோபரில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment