Monday 22 May 2017

22nd & 23rd MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

ஸ்பெயின் லீக்: ரியல் மாட்ரிட் சாம்பியன்
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் அணியினர்.
லா லிகா என்றழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட்.


ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலாகா அணியைத் தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில் பென்ஸீமா கோலடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றி கண்டது. இதன்மூலம் 23-ஆவது வெற்றியைப் பெற்ற மாட்ரிட் அணி 93 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
வெற்றி குறித்துப் பேசிய மாட்ரிட் பயிற்சியாளர் ஜினெடின் ஜிடேன், "எனது தொழில்முறை வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்த தினம் இது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக நடனம் ஆட விரும்புகிறேன். இந்த லீகில் சாம்பியன் பட்டம் வெல்வது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது.
நீண்ட நாள்களாக பட்டம் வெல்லாததால் இந்த முறை பட்டம் வெல்வதில் தீவிரமாக இருந்தோம். ரொனால்டோ எப்போதுமே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். இந்த முறையும் அதேபோன்று ஆரம்பத்திலேயே கோலடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவருடைய ஆட்டத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்' என்றார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி, பின்னர் அதன் பயிற்சியாளராக செயல்பட்டு ஸ்பெயின் லீகில் கோப்பையை வென்று தந்த 6-ஆவது நபர் ஜினெடின் ஆவார்.
ஐபிஎல்: மும்பை 3-ஆவது முறையாக சாம்பியன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை இண்டியன்ஸ்.
முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.
அதிர்ச்சித் தொடக்கம்: ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியில் பார்த்திவ் படேல் 4, லென்டில் சிம்மன்ஸ் 3 ரன்களில் வெளியேற, அம்பட்டி ராயுடுவுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த ஜோடி நிதானம் காட்ட, முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை.
பெர்குசன் வீசிய 6-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட, அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தன. மும்பை அணி 7.2 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்திருந்தபோது அம்பட்டி ராயுடு (12 ரன்கள்) ரன் அவுட்டானார்.

உலகம் :

வட கொரியா ஏவுகணை சோதனை முழு வெற்றி: ராணுவத்தில் ஈடுபடுத்தத் தயார் என அதிபர் அறிவிப்பு
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை (மே 21) நிகழ்த்திய ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றதாகவும் அதனை ராணுவத்தில் ஈடுபடுத்தத் தயார் என்றும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்தார்.
வட கொரிய அரசு செய்தி நிறுவனம் இது தொடர்பாகத் தெரிவித்ததாவது:
அதிபர் கிம் ஜோங்-உன் மேற்பார்வையில் ஏவுகணை சோதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தரையிலிருந்து செலுத்தக் கூடிய புக்குக்சோங்-2 ரக ஏவுகணையின் சோதனை நடைபெற்றது. முன்னர் நீருக்கு அடியில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணையை செலுத்தும் திறன் பரிசோதிக்கப்பட்டது. தற்போது நிலத்திலிருந்து செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. திட எரிபொருளில் செயல்படும் இந்த ஏவுகணை சோதனையின்போது வெற்றிகரமாகச் செயல்பட்டது.
இலக்கு தவறாமல் தாக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உள்ளது. ஏவுகணை செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. இதன் தாக்குதல் திறனும், பிற தொழில்நுட்பத் திறன்களும் கட்சியின் (அரசின்) எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் திருப்தி அளிக்கும் வகையிலும் உள்ளன.
சோதனை வெற்றிகரமாக இருந்ததையடுத்து, இந்த வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை விரைவில் அதிக அளவில் தயாரித்து, ராணுவத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று அதிபர் அறிவுறுத்தினார்.
இலங்கை அமைச்சரவையில் மாற்றம்: ரவி கருணநாயக புதிய வெளியுறவுத் துறை அமைச்சர்
இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக ரவி கருணநாயக பொறுப்பேற்கிறார்.
இலங்கை அமைச்சரவையில் பல மாற்றங்களை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா திங்கள்கிழை அறிவித்தார். கடும் விமர்சனங்களுக்கு உள்ளான பல முக்கிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.
முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு ரவி கருணநாயகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன்னர் நிதி அமைச்சராக இருந்து வந்தார்.
இதுவரை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீர இனி நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்தபோது, இலங்கை போர்க் குற்றம் தொடர்பான விசாரணை விவகாரத்தை மங்கள சமரவீர சரிவரக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். இந்த நிலையில், அவர் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
புதிய நுண்ணுயிரிக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டி கெளரவித்தது நாசா
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தனது அமைப்பு கண்டுபிடித்துள்ள புதிய நுண்ணுயிரிக்கு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரைச் சூட்டி கெளரவித்துள்ளது.
பாக்டீரியா வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியில் இதுவரை அந்த நுண்ணுயிரி கண்டறியப்படவில்லை.
நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தைச் (ஜேபிஎல்) சேர்ந்த விஞ்ஞானிகள், சர்வதேச ஆய்வு மையத்தில் உள்ள "ஃபில்ட்டர்'களை ஆய்வு செய்தபோது இந்த புதியவகை நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு "சோலிபேசில்லஸ் கலாமி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா:
தேசிய புத்தக அறக்கட்டையில் கிளார்க் வேலை
புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய புத்தக அறக்கட்டையில் (National Book Trust) நிரப்பப்பட உள்ள லேயர் டிவிசன் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Estt./23/2017
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase - II, Vasant kunj, New Delhi - 110 070
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.06.2017
அணுசக்தி துறையில் உதவித்தொகையுடன் பயிற்சி
இந்தூரில் அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 'Raja Ramanna Centre for Advanced Technology'-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர  எண்: RRCAT-2/2017
பணி: Stipendiary Trainee Category - I
காலியிடங்கள்: 23
காலியாக உள்ள துறைகள் விவரம்:
  1. Physics: கணிதம், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியல் போன்ற பிரிவில் இயற்பியலை ஒரு பாடமாக எடுத்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  1. Mechanical
  2. Electrical
  3. Electronics and Instrumentation
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics and Instrumentation போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.2017 தேதியின்படி 19 - 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாத உதவித்தொகையாக முதல் ஆண்டு மாதம் ரூ.9,300ம், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,500 வழங்கப்படும்.
பணி: Stipendiary Trainee Category - II
காலியிடங்கள்: 24
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
  1. Electronics
  2. Fitter
  3. Machinist
  4. Welder
  5. Turner
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
  1. Laboratory: இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சியுடன் Laboratory Assistant டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது முதல் ஆண்டு மாதம் ரூ.6,200, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு, தொழிற்திரன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடம்: PRCAT, Indore.
விண்ணப்பிக்கும் முறை: http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழகம்:

23ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக வரும் 23ஆம் தேதி தமிழகம் வருகிறார். 
அன்றைய தினம் உதகையில் உள்ள தனியார் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கும் அவர் மறுநாள் தில்லி புறப்பட்டு செல்கிறார். இதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மே 23-ஆம் தேதி காலை கோவை வருகிறார். 
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்குப் பிற்பகலில் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை
சென்னையில் உள்ள தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2017

வர்த்தகம் :

காதி விற்பனையை அதிகரிக்க கே.வி.ஐ.சி.யுடன் ரேமண்ட் நிறுவனம் கூட்டு
காதி துணி வகைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்கில் கதர் & கிராமத் தொழில் வாரியத்துடன் (கே.வி.ஐ.சி.), ரேமண்ட் நிறுவனம் உடன்பாடு செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து ரேமண்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கௌதம் ஹரி சிங்ஹானியா கூறியதாவது:
ரேமண்ட் நிறுவனத்துக்கு காதி பொருள்களை சந்தைப்படுத்தவும், அதன் விற்பனையை அதிகரிக்கவும் காதி & கிராமத் தொழில் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது ஒரு பொது-தனியார் பங்களிப்பு (பிபிபி) அடிப்படையிலான கூட்டுத் திட்டமாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, உத்தரவாதமளிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகைக்கு கே.வி.ஐ.சி.யிடமிருந்து காதி பொருள்களை ரேமண்ட் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும். மஸ்லின் பருத்தி, கம்பளி, பட்டு உள்ளிட்டவை அந்த கொள்முதலில் முக்கிய இடம்பெறும்.
நாடு முழுவதிலும் உள்ள காதி வகைகளைக் கொள்முதல் செய்து நிறுவனத்தின் ஜவுளித் தயாரிப்பு ஆலைகளுக்கு அனுப்பி விற்பனைக்குத் தயாரான ஆயத்த ஆடைகளாக ரேமண்ட் உற்பத்தி செய்யும்.
பேங்க் ஆஃப் இந்தியா இழப்பு ரூ.1,045 கோடி
பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா நான்காம் காலாண்டில் ரூ.1,045.54 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.12,335.71 கோடி வருவாய் ஈட்டியது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.11,381.91 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
2015-16 நிதி ஆண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.3,587.11 கோடியாக காணப்பட்ட நிகர இழப்பு சென்ற நிதி ஆண்டின் இதே கால அளவில் ரூ.1,045.54 கோடியாக குறைந்தது.
2016-17 முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.45,449.01 கோடியிலிருந்து சற்று அதிகரித்து ரூ.46,063.18 கோடியாக இருந்தது. நிகர இழப்பு ரூ.6,089.21 கோடியிலிருந்து சரிந்து ரூ.1,558.34 கோடியாக காணப்பட்டது. வாராக் கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.5,441.67 கோடியிலிருந்து குறைந்து ரூ.4,483.53 கோடியாக இருந்தது.
மொத்த வாராக் கடன் விகிதம் 13.07 சதவீதத்திலிருந்து சற்று உயர்ந்து 13.22 சதவீதமாக இருந்தது.

No comments:

Post a Comment