Friday 5 May 2017

5TH MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது தெற்காசிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்
தெற்காசிய நாடுகளுக்கான தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-9 செயற்கைக்கோளை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலை நிறுத்தியது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை 4.57 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட் மூலம் அந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக ஜிசாட்-9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்தனர். 2,230 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில் தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட இருந்தால் அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும்.

உலகம் :

சீனாவின் முதல் பயணிகள் ஜெட் வெற்றிகர சோதனை!
சீனாவின் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையோட்டத்தில் வெற்றிகரமாக வானில் பறக்கும் பயணிகள் விமானம்.
சீனா உருவாக்கிய பயணிகள் ஜெட் விமானத்தின் சோதனைப் பயணம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக அமைந்தது.
சீன அரசுக்கு சொந்தமான சீன வணிக விமான உற்பத்தி நிறுவனம் அதனை உருவாக்கியுள்ளது. சோதனைப் பயணத்தின்போது, ஷாங்காய் நகரின் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் 80 நிமிடங்களுக்கு விண்ணில் பறந்தது. ஐந்து விமானிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுடன் மேற்கொண்ட அதன் முதல் சோதனைப் பயணத்தின்போது பயணிகள் எவரையும் ஏற்றிச் செல்லவில்லை.
சீனா இதனை 'சி-919' ரக விமானம் எனக் குறிப்பிடுகிறது. அதிகபட்சம் 190 பயணிகள் செல்லக் கூடிய இவ்விமானம் ஏர்பஸ்-320, போயிங்-737 ரக விமானங்களுக்கு இணையான திறன் கொண்டது.
அமெரிக்காவின் போயிங், ஐரோப்பாவின் ஏர்பஸ் உள்ளிட்ட மேற்கத்திய விமான உற்பத்தி நிறுவனங்களுக்குப் போட்டியாக சீனா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர ரஷியாவும் ஜெட் ரக பயணிகள் விமானங்களைத் தயாரித்து வருகிறது.
ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பு வகித்த காலத்தில் இயற்றப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
'ஒபாமாகேர்' என்று அறியப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பில் திட்டத்தை ரத்து செய்ய ஆதரவு தெரிவித்து 217 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 213 வாக்குகளும் பதிவாகின. ரத்து செய்யக் கூடாது என்று குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் சிலர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு:

ஆசிய குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் சிவ தாபா, சுமித் சங்வான்; வெண்கலத்தோடு வெளியேறினார் விகாஸ்
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா, சுமித் சங்வான் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான விகாஸ் கிருஷ்ணன் அரையிறுதியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மங்கோலியாவின் தூர்னியாம்பக்கை வீழ்த்தினார் சிவ தாபா. இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் எல்னூர் அப்துராய்மூவை சந்திக்கிறார் சிவ தாபா. மற்றொரு இந்திய வீரரான சுமித் சங்வான் (91 கிலோ) தனது அரையிறுதியில் தஜிகிஸ்தானின் குர்போனோவை தோற்கடித்தார்.
அதேநேரத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) அரையிறுதியில் இருந்து விலகினார். போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனைக்கு கிருஷ்ணன் வரவில்லை. இதையடுத்தே அவர் அரையிறுதியில் இருந்து விலகியது தெரியவந்தது. எனினும் அவர் என்ன காரணத்திற்காக விலகினார் என்பது தெரியவில்லை.
அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவை வெளியேற்றியது மலேசியா
அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய அணி இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது.
மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மலேசியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற கனவோடு களமிறங்கியது இந்தியா. ஆனால் மலேசிய அணியோ ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் ஆடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் மலேசியா கோலடிக்க, அதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்ற மலேசிய அணி, இந்தியாவின் இறுதிச்சுற்று கனவை கலைத்தது.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 2-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. எனினும் ஏற்கெனவே 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிராவைப் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் 10 புள்ளிகளைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

வர்த்தகம் :

ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்கள் நியமனம
ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நியமனம் செய்தது.
இதுகுறித்து பணியாளர் நலம் மற்றும் பயிற்சி அமைச்சகம் (டி.ஓ.பி.டி) வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தற்போது செயல் இயக்குநராக உள்ள ஆர். சுப்ரமணியகுமார் அதே வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தற்போதைய செயல் இயக்குநரான ராஜ்கிரண், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.
கார்ப்பரேஷன் வங்கியின் செயல் இயக்குநரான சுனில் மேத்தா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள உஷா அனந்தசுப்ரமணியன் அலாகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு மாற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment