Wednesday 31 May 2017

1ST JUNE CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவும்-ஸ்பெயினும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி
அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை ஸ்பெயின் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி வரவேற்ற அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோய்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிய இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
அரசுமுறைப் பயணமாக ஸ்பெயினுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
ஜெர்மனியிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்குச் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை புதன்கிழமை காலை சந்தித்தார்

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:
மரியானோ ரஜோயை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இருநாடுகளும் பயங்கரவாதம் எனும் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாக அவரிடம் மோடி கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிய இருநாடுகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் என்றார் கோபால் பாக்லே.
மேலும், இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுவரும் ரயில்வே, நவீன நகரங்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஸ்பெயின் உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, ரஜோய் தலைமையிலான ஸ்பெயின் அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் புகழ்ந்தார்.
கடந்த 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்பெயினுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி
குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான புதிய வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மேலும், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு வெளியீடு: கர்நாடக ஐஆர்எஸ் அதிகாரி கே.ஆர்.நந்தினி முதலிடம்
சிவில் சர்வீசஸ் தேர்வில், கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி (ஐஆர்எஸ்) கே.ஆர். நந்தினி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி நந்தினி (26) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிலானியைச் சேர்ந்த அன்மோல் ஷேர் சிங் பேடி என்பவர் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் நந்தினி கலந்து கொள்வது இது 4-ஆவது முறையாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அவருக்கு இந்திய வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டது. அதன்படி, தற்போது அவர், ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் போதை மருந்து, கலால், சுங்கத்துறை தேசிய அகாதெமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

தமிழகம்:

பேரவைச் செயலாளராக பூபதி நியமனம்
தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக க.பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொறுப்பு செயலாளராக உள்ள இவர், ஆளுநரின் உத்தரவுக்குப் பிறகு செயலாளராக நியமிக்கப்படுவார் என்று சட்டப்பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏ.எம்.பி.ஜமாலுதீன் புதன்கிழமையுடன் ஓய்வு பெற்றார். அவர் தனது ஓய்வுகால வயதை கடந்த 2012 -ஆம் ஆண்டு மே மாதமே பூர்த்தி செய்தபோதும், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தப் பணி நீட்டிப்புக்கான காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஐஏஎஸ் தேர்வு: ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் மாநிலத்தில் முதலிடம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் குடிமைப் பணி (ஐஏஎஸ்) தேர்வில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 21-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ரோட்டடி தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகவனம். இவரது மனைவி முல்லைக்கொடி. இவர்களுக்கு பிரதாப் முருகன் (22), சிவராம போஸ் (20) என்று இரு மகன்கள் உள்ளனர்.
இதில் பிரதாப் முருகன் தற்போது ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 21-ஆவது இடத்தையும் மாநில அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் 5-ம் வகுப்பு வரை வத்திராயிருப்பு ரெங்காராவ் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை திருநெல்வேலி ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் படித்துள்ளார்.

விளையாட்டு:

பிரெஞ்சு ஓபன்: 3-ஆவது சுற்றில் நடால், முகுருஸா
3-ஆவது சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் முகுருஸா.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கார்பைன் முகுருஸா உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்று ஆட்டங்களில் நடால் 6-1, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியையும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போர்ச்சுகலின் ஜோ செளசாவையும் தோற்கடித்தனர்.
வீனஸ் வெற்றி: மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் கார்பைன் முகுருஸா 6-7 (4), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட்டையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் குருமி நராவையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-2, 7-6 (6) என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிளிப்கென்ஸையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-0, 6-0 என்ற நேர் செட்களில் கனடாவின் பிரான்காய்ஸ் அபன்டாவையும் வீழ்த்தினர்.

வர்த்தகம் :

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக சரிவு
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் விளைவாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக குறைந்தது.
அதேநேரத்தில், விவசாயத் துறை எந்த பாதிப்புமின்றி நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் 87 சதவீதம் புழக்கத்தில் இருந்து வந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாபஸ் பெற்றது. இதன் விளைவாக, 2015-16-ஆம் நிதியாண்டில் 8 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வெகுவாக குறைந்து 7.1 சதவீதம் ஆனது.

No comments:

Post a Comment