Thursday 1 June 2017

2nd JUNE CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

ஹிந்திக்கு அடுத்ததாக தமிழிலும் பிரத்யேக விளையாட்டு சேனல் தொடங்கியுள்ள ஸ்டார் நிறுவனம்!
 தமிழ்நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கு இது உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தி.


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய மொழிகளில் ஹிந்திக்கு அடுத்ததாக தமிழிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என்கிற பிரத்யேக விளையாட்டு சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பத்தாவது சேனலாகும். இதற்கு முன்பு Star Sports 1, Star Sports 2, Star Sports Hindi 1, Star Sports Select 1 மற்றும் அவற்றின் ஹெச்.டி. சேனல்கள். இந்த எட்டு சேனல்களுடன் சேர்த்து கூடுதலாக Star Sports Select HD 2 என்றொரு சேனலும் இருந்தது. தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 10-வது சேனலாகத் தொடங்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் சமீபத்தில் தமிழிலும் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. அதிலும் சாம்பியன்ஸ் டிராபி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஹேமங் பதானி, பத்ரிநாத் போன்றோர் தமிழில் வர்ணனை அளிக்கவுள்ளார்கள். 
பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து ராமச்சந்திர குஹா விலகல்!
பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.
ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும் என்று அறிவித்தது.  இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம்பெற்றார்கள். 

உலகம் :

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவை ரத்து செய்வதாக அறிவித்தது ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவை ஆப்கானிஸ்தான் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
காபூல் மற்றும் லாகூர் நகரில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இருநாட்டு அணிகள் இடையே டி20 போட்டிகளுக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நட்பு ரீதியிலான டி20 போட்டிகளை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
காபூல் நடந்த தாக்குதலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்நாட்டிற்கு விளையாட்டு போட்டிக்கு செல்ல அனைத்து நாடுகளும் தயங்குகிறது. இப்போது ஆப்கானிஸ்தானும் இவ்வாறு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் அதன் மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரையில் அந்நாட்டுடன் விளையாட்டு போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கண்டம் தாவும் ஏவுகணை அழிப்புத் தளவாடம்: அமெரிக்கா வெற்றிகரப் பரிசோதனை
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், வாண்டென்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட ஜிஎம்டி வான்பாதுகாப்பு ஏவுகணையைப் பார்வையிடும் பொதுமக்கள்.
 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை, இடைமறித்துத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தளவாடத்தை அமெரிக்கா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
அணு ஆயுத சக்தி கொண்ட வட கொரியா, அமெரிக்காவைக் குறி வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்க முயன்று, அதில் அதிவேக முன்னேற்றமும் அடைந்து வருகிறது.
இந்தச் சூழலில், வட கொரியா உருவாக்கக் கூடிய நெடுந்தொலைவு ஏவுகணைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தனது வலிமையை உறுதி செய்யும் வகையிலேயே, இந்த இடைமறி ஏவுகணைப் பரிசோதனையை அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்ததாவது:
அமெரிக்க ராணுவத்தின் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ரகத்தைச் சேர்ந்த ஒரு மாதிரி ஏவுகணை மார்ஷல் ஐலாண்ட்ஸ் தீவிலிருந்து செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டது.

தமிழகம்:

ஐஏஎஸ் தேர்வில் சிதம்பரம் மாணவி நந்தினிதேவி தமிழக அளவில் 5-ம் இடத்தில் தேர்ச்சி
சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி டாக்டர் கே.நந்தினிதேவி ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் ஜி.குப்பன், ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.குமுதவள்ளி ஆகியோரின் மகள் கே.நந்தினிதேவி. இவர் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ வரை படித்தார். பிளஸ்டூ தேர்வில் 1174 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.
பின்னர் மதிப்பெண் தகுதி அடிப்படையில் சென்னை எம்.எம்.சி மருத்துவக்கல்லூரி இடம் பெற்று எம்பிபிஎஸ் பயின்றார். படித்து முடித்த பின்னர் சென்னை சங்கர் அகாதெமியில் இணைந்து சிவில் சர்வீஸ் பயிற்சி பெற்று முதல் தேர்வு எழுதினார். தற்போது நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று முதல் தேர்விலேயே அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

வர்த்தகம் :

ரூ. 2,342 கோடி நிகர லாபம்: என்எல்சி புதிய சாதனை
கடந்த 31.3.2017 அன்றுடன் முடிவடைந்த நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ. 8,672.84 கோடி வர்த்தகம் மேற்கொண்டு, ரூ. 2,342.20 கோடி நிகர லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
என்எல்சி நிறுவனத்தின் 2016-17ஆம் ஆண்டின் நிதி நிலை முடிவுகளின்படி, கடந்த நிதியாண்டில் 20 கோடியே 58 லட்சத்து 14 ஆயிரம் கன மீட்டர் மேல் மண் நீக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கான 16.10 கோடி கன மீட்டரை விட 27.83 சதவீதம் அதிகம். 2015-16 ஆம் ஆண்டை விட 20.87 சதவீதம் அதிகமாகும்.
அனைத்துச் சுரங்கங்களிலிருந்தும் 2 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கான 2.68 கோடி டன்னை விட 3.05 சதவீதம் அதிகம். 2015-16 ஆம் ஆண்டின் உற்பத்தி அளவைவிட 8.51 சதவீதம் அதிகம்.



No comments:

Post a Comment